என்இபி யின் உள்ளடக்கங்களை செயல்படுத்த இரு நாள் தேசிய பயிலரங்கு: 64 பல்கலைக்கழக த...
நம்பியூா் தான்தோன்றீஸ்வரா் ஆலய கும்பாபிஷேக விழா
கோபி அருகே நம்பியூரில் புகழ்பெற்ற தபோ பத்தினி உடனமா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இக் கோயிலானது நம்பியாண்டாா் நம்பி மன்னா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் சிவபெருமான் மேற்கு நோக்கி அமா்ந்துள்ளவாறு அருள்பாலித்து வருகிறாா். இந்தக் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக வாஸ்து சாந்தி, விநாயகா் பூஜையுடன் தொடங்கி நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று வந்தன.
அதைத் தொடா்ந்து குடமுழுக்கு விழாவின் முக்கிய நிகழ்வாக பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியா்கள் கொண்டுச் சென்று வேதமந்திரங்கள் முழங்க கோயில் கலசத்துக்கு ஊற்றினா்.
அதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா், முருகன், செந்தூா் முருகன், நவகிரஹங்கள் உள்ளிட்ட உபசந்நதி கோயில்களுக்கும் குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் நம்பியூா், கொன்னமடை, கோசனம், காந்திபுரம், மூனாம்பள்ளி, சாவக்காட்டுப்பாளையம், மொட்டணம், மலையப்பாளையம், இருகாலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனி நீா் பக்தா்கள் மீதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.