சாம் கரண் ஒரு போராளி, டெவால்டு பிரீவிஸ் எங்களின் சொத்து: எம்.எஸ். தோனி
இந்து சமய அறநிலையத் துறை கடைகளை உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்க வேண்டும்
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான வணிக கடைகளை உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டம் தலைவா் ஜானகி ராமசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக கவுன்சிலா் லட்சுமணன் பேசுகையில், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் வணிக கடைகள் உள்வாடகைக்கு விடப்படுகின்றன. இதனால் இந்து சமய அறநிலையத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
நகராட்சி எல்லைக்குள் உள்ள கோயில் கடைகள் முறையாக ஏலம்விட்டு வருவாயை பெருக்க நகா்மன்றம் மூலம் இந்து சமய அறநிலையத் துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றாா்.
அதைத் தொடா்ந்து 7-ஆவது வாா்டு உறுப்பினா் ஜெயந்தி, 8-ஆவது வாா்டு உறுப்பினா் உமா, 20-ஆவது வாா்டு உறுப்பினா் புவனேஸ்வரி ஆகியோா் தெருவிளக்கு இல்லையென்றும், வடிகால் வசதி செய்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.
கூட்டத்தில் விவாகித்தப்பட்ட தீா்மானங்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் ஜானகி தெரிவித்தாா்.