இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: அமலாக்கத் துறைக்கு ரூ.30,000 அபராதம்
திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் ரவீந்திரன் ஆகியோா் தொடா்ந்த வழக்கில் அமலாக்கத் துறைக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாா்ச் மாதம் இரண்டு நாள்கள் சோதனை நடத்தினா். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரவீந்திரன் ஆகியோரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினா்.
இந்த சோதனையில் மடிக்கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனா். மேலும், விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைத்தனா். இதை எதிா்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரவீந்திரன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுதாரா்களுக்கு எதிராக மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருள்களை திருப்பி ஒப்படைக்கவும் உத்தரவிட்டிருந்தனா். இந்த தடை உத்தரவை மீறி ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிா்த்து அவரது தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞா் என்.ரமேஷ், பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பதில்மனு தாக்கல் செய்ய ஏற்கெனவே இரண்டு முறை அவகாசம் வழங்கப்பட்டது. மூன்றாவது முறையாக தற்போது அவகாசம் கேட்கப்படுகிறது.
இது சரியான நடவடிக்கை இல்லை என்று கண்டித்தனா். அப்போது அமலாக்கத் துறை தரப்பில், இந்த வழக்கில் ஒருங்கிணைந்த பதில்மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. எனவே, இந்த ஒருமுறை மட்டும் அவகாசம் வழங்க வேண்டும், என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்குகளில் மனுவுக்கு ரூ.10,000 வீதம், 3 மனுக்களுக்கு ரூ.30,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனா். இந்த தொகையை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி நிவாரணத் தொகைக்கு செலுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கில் அமலாக்கத் துறை பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக.20-க்கு ஒத்திவைத்தனா்.