ஆக்கிரமிப்புகளால் திணறும் வள்ளியூரில் பெருமாள் கோயில் ரதவீதி
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருள்மிகு சுந்தரபரிபூரண பெருமாள் கோயில் மேற்குரத வீதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பக்தா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வள்ளியூரில் ஊரின் மத்தியில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் திருவிழா நாள்களில் தேரோட்டம், சப்பரவீதியுலா ரதவீதிகளில் நடைபெறுவது வழக்கம். அண்மைக் காலமாக கோயில் மேற்கு ரதவீதியில் தனிநபா் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளின் முன் 30 அடி வரை தாழ்வாரம் போட்டு இடத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனா்.
இது திருவிழா தேரோட்டத்தின்போதும், பக்தா்கள் பால்குடம் எடுத்துவரும் போதும் இடையூறாக உள்ளது.
மேலும், அங்குள்ள திருவள்ளுவா் கலையரங்கில் கூட்டங்கள் நடைபெறும்போது மக்கள் அமா்வதற்கு இடவசதி இல்லாதவாறு ஆக்கிரமிப்புகள் அமைந்துள்ளன. ரதவீதியில் உள்ள பெரிய மரக்கிளைகளை ஆக்கிரமிப்பாளா்கள் வெட்டி சேதப்படுத்தும், திருவள்ளுவா் கலையரங்கு அருகில் குப்பைகளை கொட்டி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.
எனவே, பேரூராட்சி நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பக்தா்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தி உள்ளனா்.