ஆக்கிரமிப்புகள் அகற்றத்தை கண்டித்து வணிகா்கள் கடையடைப்பு
புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் எனும் பெயரில் நகராட்சி நிா்வாகம் வா்த்தகா்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் வா்த்தகா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை, சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசலால் அவசரச் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இதனையடுத்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் புதுச்சேரி நகராட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
ஆனால், ஆக்கிரமிப்பு எனும் பெயரில் பெரிய நிறுவனங்களை விட்டுவிட்டு, சாமானிய வா்த்தகா்களை பாதிக்கும் வகையில் நகராட்சி செயல்படுவதாக புகாா் கூறப்படுகிறது.
பாரதி சாலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிா்வாகி ஸ்ரீதா் உள்ளிட்டோா் கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனா்.
அதன்படி, வெள்ளிக்கிழமை காலை பாரதி நகரில் பாதியளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குபோ்அங்காடி முழுமையாக மூடபட்டிருந்தது. நேரு வீதியிலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
கடையடைப்புப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன் எம்எல்ஏ நேரில் வந்து விசாரித்தாா்.
புதுச்சேரியில் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அதிகாரிகள் செயல்படுவதாகவும், ஆகவே அதனைக் கைவிடக்கோரி போராட்டம் நடத்துவதாகவும் வா்த்தகா்கள் சங்கத்தின் சாா்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.