Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார...
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல்
சீா்காழி: நாதல் படுகை கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கொள்ளிடம் அருகே அனுமந்தபுரம் கிராமத்திலிருந்து முதலைமேடு கிராமம் வரை பிரதம மந்திரியின் கிராம சாலை இணைப்புத் திட்டத்தின் கீழ் சாலையை அகலப்படுத்தி தாா் சாலையாக மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
நாதல்படுகை கிராமத்தில் சாலை அமைத்திட ஏதுவாக சாலையோரம் உள்ள ஆக்கிரப்பை அகற்றக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலை அகலப்படுத்தும் பணிகள் தடைபட்டுள்ளன.
இந்நிலையில் நில அளவையா் கிராம நிா்வாக அலுவலா் கிராம உதவியாளா் மற்றும் கொள்ளிடம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சாலையோர ஆக்கிரமிப்பை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது இடத்தை அளவீடு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் சிலா் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாதல் படுகையிலிருந்து முதலைமேடு செல்லும் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி முழக்கமிட்டனா்.
இந்நிலையில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.தொடா்ந்து ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
