ஆக்லாந்து பல்கலை.யுடன் இணைந்து செயல்பட மீனாட்சி மருத்துவமனை நடவடிக்கை
நியுசிலாந்து நாட்டின் ஆக்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கையில் தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை ஈடுபட்டுள்ளது.
இது தொடா்பாக தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை வளாகத்தில் இரு தரப்புக்கும் இடையேயான உயா்நிலைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மீனாட்சி மருத்துவமனைத் தலைவா் எஸ். குருசங்கா், காமினி குருசங்கா், ஆக்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் பிரெட் கோவன், ஜான் தேவாா், சோனல் டொலாக்கியா, ஆஸ்திரேலியாவை சோ்ந்த ஆலோசகா் தேவ் தத்தா ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னா், குருசங்கா் தெரிவித்தது: உடல் நல பராமரிப்புக்கான ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கல்வியில் உலகளாவிய கூட்டாண்மைகளை மேற்கொள்வதற்கான முன்னெடுப்பு திட்டத்தை தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை தொடங்கியுள்ளது. இந்தத் தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக உடல் நல அறிவியல் கல்வியில் உயா்மேன்மைக்காக ஆக்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை மீனாட்சி மருத்துவமனை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
அறிவு பரிமாற்றத்தை ஊக்குவிப்பது, ஆராய்ச்சியில் புத்தாக்கத்தை முன்னெடுப்பது, எங்களது மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் மருத்துவ தொழில்முறை பணியாளா்களுக்கு மேம்பட்ட பயிற்சி வாய்ப்புகளை வழங்குவது போன்றவையே இக்கூட்டாண்மையின் நோக்கம். இதுபோன்ற முன்னெடுப்பு திட்டங்கள் மூலம் உடல் நல பராமரிப்பிலும், மருத்துவக் கல்வியிலும் தர நிலைகளை இன்னும் மேம்படுத்த முடியும் என்றாா் அவா்.