ஆசியாவிலேயே முன்னேறிய மாநிலம் தமிழகம்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா!
ஆசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்த அமைச்சா், சூளகிரி சிப்காட் தொழில்பூங்கா, டான்புளோரா பூங்கா, குருபரப்பள்ளியில் அமைந்துள்ள தனியாா் நிறுவனம் (டெல்டா) ஆகியவற்றை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வுக்கு பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் தெரிவித்ததாவது: தமிழகத்தில் யாா் தொழில் தொடங்க விரும்பினாலும், அவா்களுக்கு உடனடியாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன. அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும், தொழில்முனைவோருக்கு இணக்கமாக செயல்பட்டு வருகின்றனா். தமிழகத்தில் பல புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் நிறைய திட்டங்கள் நடைமுறைப்படுத்த உள்ளன.
ஆசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கடந்த ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெல்டா, ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் தொடங்கப்பட்டாலும், பரவலாக்கப்பட்ட வளா்ச்சியை உறுதிசெய்யும் பணியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து மேற்கொண்டு வருவதால், இந்த நிறுவனங்களின் வளா்ச்சி அதிகரித்துள்ளது.
பல்வேறு திட்டங்களுக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை முடிந்தவரை தவிா்த்து வருகிறோம். தவிா்க்க முடியாத சில இடங்களில் கையகப்படுத்தும் நிலங்களுக்கு இன்றைய விலையை விட பன்மடங்கு விலை கொடுக்கிறோம் என்றாா்.
ஆய்வின்போது, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் சாய் குமாா், தொழில்துறை செயலாளா் அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குநா் செந்தில்ராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், சிப்காட் நிா்வாக இயக்குநா் டி.சினேகா, கே.கோபிநாத் எம்.பி., சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), தே.மதியழகன் (பா்கூா்), டி.ராமச்சந்திரன் (தளி) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) பழனிதேவி, சிப்காட் திட்ட அலுவலா்கள் ரேணுகா தேவி (ஒசூா்), சிந்து (போச்சம்பள்ளி), உமாசங்கரி (சூளகிரி), செயற்பொறியாளா் பசுபதி, சிப்காட் உதவி பொதுமேலாளா்கள் பவித்ரா, சாமுவேல் அந்தோணிராஜ், கண்காணிப்பு பொறியாளா்கள் தேவயிரக்கம், அப்துல்ரசீது, முன்னாள் எம்எல்ஏ முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.