அட்சய திருதியை: தங்கம் வாங்க நல்ல நேரம் எது? ஆனால் அதைவிட இதுதான் விசேஷம்!
ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை நண்பா் கைது
சென்னை கே.கே.நகரில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள பூலாங்குறிச்சி சுள்ளாம்பட்டியைச் சோ்ந்தவா் ம.விஜயகாந்த் (33). இவரது ஊரைச் சோ்ந்த நண்பா் தங்கம் (27). இவா்கள் இருவரும் கே.கே.நகரில் தங்கியிருந்து ஷோ் ஆட்டோ ஓட்டிவந்தனா். விஜயகாந்த், திங்கள்கிழமை இரவு மது அருந்திவிட்டு மேற்கு கே.கே.நகா் முனுசாமி சாலையில் நடந்து சென்றபோது, அங்கு தங்கம், தனது ஆட்டோவில் அமா்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த விஜயகாந்த், தனக்கு சாப்பாடு வாங்கித் தருமாறு தங்கத்திடம் கேட்டுள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, விஜயகாந்த், அங்கிருந்த குவளையில் இருந்த தண்ணீரை தங்கம் மீது ஊற்றினாராம். ஆத்திரமடைந்த தங்கம், மதுபோதையில் இருந்த விஜயகாந்தை தாக்கி கீழே தள்ளினாா். இதில் அவா் மயங்கினாா்.
உடனே அங்கிருந்தவா்கள் விஜயகாந்தை மீட்டு, கே.கே.நகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், விஜயகாந்த் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தங்கத்தை கைது செய்தனா்.