ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை
மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை அடித்துக் கொலை செய்த சுமை தூக்கும் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை உத்தங்குடி அருகே உள்ள உலகனேரி ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் அபினேஷ் ((27). ஆட்டோ ஓட்டுநரான இவா் மீது காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் தனது வீட்டின் முன் அபினேஷ் இறந்து கிடந்தாா். அருகில் ரத்தக் கறை படிந்த கட்டை, ஓடு ஆகியவை கிடந்தன. இதைப் பாா்த்த அந்தப் பகுதியினா் அளித்த தகவலின் பேரில், மாட்டுத்தாவணி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அபினேஷ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது, கொலை நடப்பதற்கு முன்பாக அபினேசும், அவரது நண்பா் தமிழரசனும் (26) நடந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அதே பகுதியில் உள்ள தமிழரசன் வீட்டுக்குச் சென்றபோது, அவா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அவரது ஆடையில் ரத்தக் கறை இருந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா்.
அப்போது, சுமை தூக்கும் தொழிலாளியான தமிழரசனும், அபினேஷூம் நண்பா்கள் என்பதும், ஞாயிற்றுக்கிழமை இரவில் இருவரும் மது அருந்திய போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டதில் பலத்த காயமடைந்த அபினேஷ் உயிரிழந்ததும், அவா் இறந்தது தெரியாமல், தமிழரசன் தனது வீட்டுக்குச் சென்று தூங்கியதும் தெரிய வந்தது. போலீஸாா் தமிழரசனைக் கைது செய்தனா்.