கும்பகோணம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை... போக்சோவில் பேராசிரியர் கைது!
``ஆண்டுக்கு ரூ.2.5 கோடி லாபம் கிடைக்குது..'' -உருளைக்கிழங்கு சாகுபடியில் ஜெயித்த பட்டதாரி விவசாயி
வேளாண் துறையில் பட்டப்படிப்பு
விவசாயம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் பஞ்சாப் போன்ற சில மாநிலங்களில் விவசாயத்தை தங்களது தொழிலாக விருப்பத்துடன் சிலர் செய்து கொண்டிருக்கின்றனர்.
பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் மாவட்டத்தில் உள்ள சைதேகி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் போஹர் சிங் கில் (37). இவர் வேளாண் துறையில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனது சொந்த கிராமத்திற்கு வந்தார். அவரது கிராமம் இரண்டு கால்வாய்களுக்கு இடையில் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் மற்ற விவசாயிகளைப்போல் நெல் மற்றும் கோதுமையை மட்டும் கில் பயிரிட்டார். அதன் பிறகு சோதனை அடிப்படையில் இரண்டு ஏக்கரில் உருளைக்கிழங்கு பயிரிட்டார். அதில் நல்ல லாபம் கிடைத்ததால் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யும்பரப்பளவை கில் அதிகரித்தார். சாப்பாடு, விதைக்காக தனித்தனியாக உருளைக்கிழங்கை பயிரிட்டார்.
250 ஏக்கரில் உருளைக்கிழங்கு விவசாயம்...
ஆரம்பத்தில் தனது குடும்பத்திற்கு சொந்தமான 37 ஏக்கரில் இந்த விவசாயத்தை செய்து வந்தார். ஆனால் உருளைக்கிழங்கின் தேவை அதிகமாக இருந்ததால் பக்கத்தில் இருந்த 200 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கி அதிலும் உருளைக்கிழங்கு பயிரிட்டார். உருளைக்கிழங்கு விவசாயத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைவான அல்லது சர்க்கரை இல்லாத வகைகளை தேர்வு செய்து பயிரிட்டார்.
இது குறித்து கில் கூறுகையில்,''எனது நிலத்தில் கோதுமை, நெல் பயிரிட்டேன். சிறிய அளவில் உருளைக்கிழங்கு பயிரிட்டேன். அதில் எனக்கு நல்ல வருவாய் கிடைத்தது.
உடனே கோதுமை பயிரிடுவதை நிறுத்திவிட்டு உருளைக்கிழங்கு பயிரிட ஆரம்பித்தேன். அதோடு விவசாயத்தை அதிகரிக்க நிலம் குத்தகைக்கு எடுத்துள்ளேன். இப்போது 250 ஏக்கரில் உருளைக்கிழங்கு விவசாயம் செய்கிறேன். சர்க்கரை இல்லாத உருளைக்கிழங்கிற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. என்னால் சப்ளை செய்ய முடியவில்லை.
தெளிப்பு நீர் பாசனம்...
உருளைக்கிழங்கு மட்டுமல்லாது பாசிப்பயிறு, மக்காச்சோளம், பாசுமதி ரக நெல் போன்றவற்றையும் விவசாயம் செய்கிறேன். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் அதனை கருத்தில் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெளிப்பு நீர்பாசனத்தை அமைத்துள்ளேன். ஆரம்பத்தில் இதனை 40 ஏக்கரில் தொடங்கினேன். இதில் எனக்கு நல்ல முடிவு கிடைத்தது. இதன் மூலம் தண்ணீர் தேவை 50 சதவீதம் குறைந்துள்ளது. இந்த தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் காற்றில் உள்ள நைட்ஜரன் நிலத்திற்கு கிடைக்கிறது. இதன் மூலம் யூரியா பயன்பாடு 40 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. மகசூல் அதிகரிப்பதோடு தரமும் நன்றாக இருக்கிறது. இம்முறையால் மண் எப்போதும் மென்மையாக இருக்கிறது. இதனால் இதனை 150 ஏக்கருக்கு விரிவுபடுத்தி இருக்கிறேன்.
எனது நிலம் முழுவதற்கும் தெளிப்பு நீர் பாசனத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளேன். இந்த திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு 25 குவிண்டால் உருளைக்கிழங்கு அதிகமாக கிடைக்கிறது. மக்காச்சோளத்தில் 10 குவிண்டால் அதிகமாக கிடைக்கிறது. நானோ யூரியாவை இதற்காக பயன்படுத்துகிறேன். தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் ஒரே நாளில் 100 ஏக்கருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் பூச்சித்தொல்லையும் குறைவாக இருக்கிறது. தெளிப்பு நீர் பாசனத்திற்கு அரசிடமிருந்து மானியம் கிடைக்கிறது. மானியம் போக இத்திட்டத்திற்கு ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் மட்டும் செலவாகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
``ஒரு ஏக்கரில், ஒரு லட்சம் ரூபாய் லாபம்..''
ஒரு ஏக்கருக்கு நான் 70 ஆயிரம் ரூபாய் குத்தகை பணம் கொடுக்கிறேன். எனக்குச் செலவு போக ஒரு ஏக்கரில் ஒரு லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. 250 ஏக்கரில் அனைத்து செலவும் போக எனக்கு 2.5 கோடி லாபம் கிடைக்கிறது. வெளிநாடுகளில் எனது நண்பர்கள் சம்பாதிப்பதை விட அதிகமாகவே சம்பாதிக்கிறேன். நெல் அறுவடைக்கு பிறகு வைக்கோல்களை எரிப்பதில்லை. அதனை அப்படியே பூமிக்கு உரமாக்கிவிடுகிறேன். இதற்கு தேவையான இயந்திரங்கள் என்னிடம் இருக்கிறது. நவீன விவசாயத்திற்காக 5 கோடி மதிப்பிலான இயந்திரங்களை வாங்கி இருக்கிறேன். அனைத்தையும் விவசாயத்தில் கிடைத்த பணத்தில் வாங்கினேன்''என்றார்.
இவரிடம் நிரந்தரமாக 20 பேர் வேலை செய்கின்றனர். இது தவிர தேவைக்கு தக்கபடி ஒவ்வொரு ஆண்டும் தற்காலிகமாக 250 பேருக்கு வேலை கொடுக்கிறார்.