கரூர் : வாபஸ் பெறுவதாக கூறிய ஆனந்த்; அனுமதி அளித்து தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற...
ஆந்திரா பேருந்து தீ விபத்து: போதையில் பைக் ஓட்டிய இளைஞர்கள்தான் காரணமா? - போலீஸ் சொல்வது என்ன?
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தெகுரு என்ற இடத்தில் பெங்களூருவை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று அதிகாலையில் தீப்பிடித்து எரிந்து 20 பேர் உயிரிழந்தனர். பலர் பஸ்சில் இருந்து ஜன்னல் வழியாக வெளியில் குதித்து உயிர் தப்பினர். பஸ் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது சாலையில் ஏற்கனவே விபத்துக்குள்ளாகி கிடந்த பைக் மீது மோதிக்கொண்டது. பயணிகளுடன் வந்த பஸ் அந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி அதனைச் சிறிது தூரத்திற்கு இழுத்துச்சென்றது. இதனால் இரு சக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் டேங்க் உடைந்து தீப்பிடித்துக்கொண்டதால் பஸ் தீப்பிடித்தது என்று விசாரணையில் தெரிய வந்தது.
இந்த விபத்து தொடர்பான தடயவியல் அறிக்கை போலீஸாரிடம் கிடைத்து இருக்கிறது. அதில் விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது.

இது குறித்து கர்னூல் போலீஸ் அதிகாரி பிரவீன் கூறுகையில், ''இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் மது அருந்தியது தெரிய வந்துள்ளது. சங்கர் மற்றும் சாமி ஆகிய இரண்டு பேரும் மது அருந்திவிட்டு உணவகம் ஒன்றில் சாப்பிட்டுள்ளனர். அதிகாலை 2 மணிக்கு இரண்டு பேரும் லட்சுமிபுரம் என்ற கிராமத்தில் இருந்து பைக்கில் புறப்பட்டுள்ளனர். வழியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் நிறுத்தி பெட்ரோல் நிரப்பியுள்ளனர்.
அதன் பிறகு சங்கர் குடிபோதையில் கண்மூடித்தனமாக பைக்கை ஓட்டினார். பைக் சறுக்கி சாலை தடுப்பு மீது மோதியது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். சங்கரை, சாமி சாலையில் இருந்து ஓரத்தில் இழுத்து பார்த்தார். அப்போதே சங்கர் இறந்திருந்தார். அந்நேரம் சாலையில் கிடந்த பைக்கை சாமி எடுக்க நினைத்தார். ஆனால் அதற்குள் வேகமாக வந்த பஸ் பைக் மீது மோதி அதனைச் சிறிது தூரம் இழுத்துச்சென்றது. அதனைத் தொடர்ந்தே பைக் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்துக்கொண்டது.
சாமி பயத்தில் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். அவரிடம் விசாரித்தபோது மது அருந்தி இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்'' என்றார்.
அவர்கள் இரண்டு பேரும் நள்ளிரவில் மது அருந்திவிட்டு பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதோடு 20 பேரின் மரணத்திற்கும் காரணமாக அமைந்துள்ளனர்.




















