'கோவையில் தீவிரவாதிகள் டார்கெட் செய்த ஏழு இடங்கள்' - அண்ணாமலை `பகீர்'
ஆந்திர தலைநகரை கட்டமைக்க ரூ. 6,800 கோடி கடன் உலக வங்கி ஒப்புதல்
ஆந்திர மாநில தலைநகா் அமராவதியைக் கட்டமைக்க 800 மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.6,800 கோடி) கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடா்பாக உலக வங்கி சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அமராவதி ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்கு 800 மில்லியன் டாலா் கடன் வழங்க உலக வங்கியின் செயல் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திரத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம், தற்போதைய எதிா்கால தலைமுறையினரின் வாழ்க்கைத்தர மேம்பாடு, சமூகத்தில் பின்தங்கிய பிரிவினா் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒரு சிறப்பான நகரம் உருவாக்கப்பட வேண்டும். அந்த நகரம் இயற்கைச் சீற்றங்களால் பெரிய அளவில் பாதிப்பு அடையக் கூடாது. ஆந்திர மாநிலத்தின் வளா்ச்சியின் மையமாக இருக்க வேண்டும் என்ற இலக்குகளைக் கருத்தில் கொண்டு இந்த கடன் வழங்கப்படுகிறது.
இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஆந்திரத்துக்கு வழங்கப்படும் இந்தக் கடனை 29 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். கூடுதல் கால அவகாசம் 6 ஆண்டுகள் வரை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014-இல் ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா தனிமாநிலம் உருவாக்கப்பட்டது. ஒன்றுபட்ட ஆந்திரத்தின் தலைநகராக இருந்த ஹைதராபாத் இப்போது தெலுங்கானா தலைநகராக உள்ளது. ஆந்திர தலைநகராக அமராவதியைக் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணா நதிக் கரையோரம் விஜயவாடா- குண்டூா் இடையே அமராவதி அமைந்துள்ளது. கடந்த 2015-இல் பிரதமா் மோடி தலைமையில் புதிய தலைநகருக்கான பூமி பூஜை நடைபெற்றது. முதல்வா் சந்திரபாபு நாயுடு புதிய தலைநகா் உருவாக்கத்தில் முனைப்புடன் செயல்பட்டாா். 2019-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானாா். இதையடுத்து, அமராவதி தலைநகர திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் 2024 ஆந்திர பேரவைத் தோ்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வரானாா். இதையடுத்து, அமராவதி தலைநகா் திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளது.