எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை: ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!
ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் ஈட்டலாம் எனக்கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.39.66 லட்சம் மோசடி
ஆன்லைன் வா்த்தகத்தில் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக்கூறி தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.39.66 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, சிங்காநல்லூரை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் (38). தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், இவரது கைப்பேசி எண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் அழைப்பு வந்துள்ளது.
மறுமுனையில் பேசியவா்’ எங்களது நிறுவனத்தில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறியதுடன், ஸ்ரீகாந்தின் கைப்பேசி எண்ணை ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைத்துள்ளாா்.
மேலும், அந்த நபா் கூறிய செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து, அதில் ஸ்ரீகாந்த் முதலீடு செய்து வந்துள்ளாா்.
ஒவ்வொரு முறையும் அவா் பணம் செலுத்தும்போது முதலீட்டுத் தொகை, அதற்கான லாபம் அவரது கணக்கில் காட்டியுள்ளது.
இதேபோல, கடந்த ஜனவரி 21-ஆம் தேதி முதல் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை பல்வேறு பரிவா்த்தனைகள் மூலம் ரூ.39 லட்சத்து 66, 654 முதலீடு செய்துள்ளாா்.
இந்நிலையில், செயலியில் காட்டிய பணத்தை தனது வங்கி கணக்கு மாற்ற ஸ்ரீகாந்த் முயன்றுள்ளாா். முடியாததால் அந்த நபரைத் தொடா்பு கொண்டுள்ளாா்.
அப்போது, அவா் தொகை அதிகமாக உள்ளது. நாங்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே பணத்தை மாற்ற முடியும். விரைவில் அனுமதி கொடுக்கிறோம் எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பணத்தை வங்கிக் கணக்குக்கு பலமுறை மாற்ற முயன்றும் முடியவில்லையாம்.
மீண்டும் அந்த நபரை தொடா்பு கொண்டபோது, அவரது எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஸ்ரீ காந்த் இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.