முட்டுக்காட்டில் ரூ.525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்!
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானிடம் இந்தியா சொன்னது எப்போது? முரண்பட்ட தகவல்கள்!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப் போவதாக முன்னதாகவே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்த நிலையில், பெரும் விமர்சனங்கள் எழுந்ததும் இப்போது ஒவ்வொரு தரப்பும் மாற்றி மாற்றி முன்னுக்குப் பின் முரணாக சொல்லத் தொடங்கியுள்ளனர். நடந்தது என்ன?
ஆலோசனைக் கூட்டம்
எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் தில்லியில் நேற்று (மே 26) நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சி. வேணுகோபால், தயாநிதி மாறன், ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை நிறுத்தம் தொடர்பாக வெளியுறவு அமைச்சகக் குழு எம்.பி.க்களிடம் அமைச்சா் ஜெய்சங்கா், வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் விளக்கமளித்தனர்.
பாகிஸ்தானுக்கு முன்னரே தகவல் கொடுக்கப்பட்டதால் இந்தியாவுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
ஏற்கெனவே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, “ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்பே தகவல் கொடுக்கப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்; இது தவறு அல்ல, மிகப் பெரிய குற்றம், இதனால் இந்தியாவுக்குத்தான் அதிக பாதிப்பு. இந்திய தரப்பில் எத்தனை விமானங்கள் அழிந்தன?” என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.
அமைச்சர் ஜெய்சங்கர் எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், “சண்டை நிறுத்தம் தொடா்பாக இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) மட்டுமே பேசிக் கொண்டனர். இந்திய அதிகாரிகள் யாரும் பாகிஸ்தானிடம் பேசவில்லை.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயங்கரவாத முகாம்களை அழித்த பின்புதான் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும்.
தாக்குதல் குறித்து முன்பே கூறினோம் என்பது முற்றிலும் உண்மைத் தன்மையற்றது. இது தவறானதைச் சித்திரிக்கும் செயல். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர்தான் ராணுவ நடவடிக்கைகளின் ஜெனரல், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார். இரு நாட்டு ‘டிஜிஎம்ஓ’க்களே பேசி சண்டையை நிறுத்தியுள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான போரை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதா? என்ற கேள்வியையும் பதிலளிக்காமல் அமைச்சர் ஜெய்சங்கர் நிராகரித்துவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடந்தது என்ன? சொன்னது எப்போது?
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி ஒன்றுமறியா சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன் பின்னர் மே 6 ஆம் தேதி நள்ளிரவில் இந்திய ராணுவம் நடத்திய பாகிஸ்தானுக்குள் விமான மற்றும் ஏவுகணை வழி நடத்திய அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானைச் சேர்ந்த 140 ராணுவ வீரர்களும் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, மே 15 ஆம் தேதியன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர், “நாங்கள் ராணுவ நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் முகாம்களைத் தாக்கப் போகிறோம் என்றும், பாகிஸ்தான் ராணுவம் இந்த நடவடிக்கைக்குள் தலையிடக் கூடாது என்றும் முன்னதாகவே தெரிவித்திருந்தோம்" எனக் கூறியிருந்தார்.
ஆனால், மே 26 ஆம் தேதி (நேற்று) பயங்கரவாதம் தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பேசுகையில் தாக்குதல் நடத்திய பின்னர்தான் பாகிஸ்தான் ராணுவத்திடம் கூறினோம். முன்னர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே இல்லை என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்திருக்கிறார்.
இதே போன்று மே 20 ஆம் தேதி வெளியுறவு விவகார நிலைக் குழுவில் பேசிய வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரியோ, “பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்திய ராணுவ நடவடிக்கை பற்றி நமது ஜெனரல் பேசினார்” என்று தெரிவித்திருந்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சரே மே 15 ஆம் தேதி ஒரு மாதிரியாகவும் மே 26-ல் வேறு மாதிரியாகவும் பேசுகிறார். இடையே, வெளியுறவுத் துறை செயலர் மிஸ்ரி ஒன்றைத் தெரிவிக்கிறார். உண்மையில் நடந்ததுதான் என்ன?
இதையும் படிக்க: ஜப்பானைத் தெறிக்க விடும் அரிசிப் பஞ்சம்!