சாத்தான்குளம் வழக்கில் ட்விஸ்ட்: ’நடந்தத நான் சொல்றேன்’ – அப்ரூவராக மாறும் மாஜி ...
ஆபரேஷன் சிந்தூர்: வீரர்களுக்குத் தண்ணீர், பால் வழங்கிய சிறுவன்; கல்விச் செலவை ஏற்ற இந்திய ராணுவம்!
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், கடந்த மே மாதம், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதற்குப் பிறகான தாக்குதல்கள் நடந்து கொண்டு இருந்தன.
இப்படிப் பதற்றத்திலிருந்த இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ஒன்று பஞ்சாப் மாநிலம் 'ஃபெரோஸ்பூர்'.
அங்கே உள்ள மம்டோட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஷ்ரவன் சிங். அவர் அங்கே அதாவது எல்லை தாக்குதலில் பணியாற்றிக் கொண்டிருந்த ராணுவ வீரர்களுக்குத் தண்ணீர், டீ, பால், லஸ்ஸி, ஐஸ் போன்றவற்றை வழங்கி வந்தார்.

அதனால், இவரை இந்திய ராணுவம், 'இளம் சிவில் வீரர்' என்று அடையாளப்படுத்தியது.
7வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சித் சிங் மன்ரால், ஷ்ரவனுக்குப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
'எனக்கு ஐஸ் கிரீம்...' - ஷ்ரவன்
இது குறித்து ஷ்ரவன், "பெரியவன் ஆகி, ராணுவ வீரர் ஆக வேண்டும் என்பது என் ஆசை.
நான் ராணுவ வீரர்களுக்கு உதவியதால், எனக்குச் சிறப்புப் பரிசு மற்றும் ஸ்பெஷல் மீல்ஸ் வழங்கினார்கள். எனக்கு ஐஸ் கிரீம்கூட கொடுத்தார்கள்" என்று மகிழ்ச்சியுடன் அப்போது தெரிவித்திருந்தார்.
ஷ்ரவன் தந்தை...
ஷ்ரவன் குறித்து அவரது தந்தை, "ராணுவ வீரர்கள் எப்போது எங்கள் ஊருக்கு வந்தார்களோ, அந்த முதல் நாளிலிருந்து எங்களது மகன் பால், லஸ்ஸி, தண்ணீர் மற்றும் ஐஸ் அவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தான்.
அவன் அதில் மிகச் சந்தோஷமாக இருந்ததால், நாங்கள் அவனைத் தடுக்கவில்லை. அவன் தொடர்ந்து ராணுவ வீரர்களைச் சந்தித்து வந்தான். அதில் எங்களுக்குப் பெருமை.
அவன் இப்போது ராணுவ வீரர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறான்" என்று அந்தச் சமயத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது, இந்தச் சிறுவனின் கல்விச் செலவை ராணுவத்தின் 'கோல்டன் ஏரோ டிவிஷன்' ஏற்கும் என்று ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.