பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை முறியடித்த விடியோ வெளியீடு!
‘ஆபரேஷன் சிந்தூா்’: பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக ஆதரவு - டி.ஆா். பாலு பேட்டி
நமது நிருபா்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூா் தாக்குதல் தொடா்பாக புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு திமுக தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக அதன் மக்களவைக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு தெரிவித்தாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் டி.ஆா். பாலு கூறியதாவது: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் 2001- ஆம் ஆண்டில் அமா்நாத் சென்று கொண்டிருந்த யாத்திரிகா்கள் மீது நடத்திய தாக்குதலில் 14 போ் கொல்லப்பட்டனா். அதன் பிறகு தொடா்ந்து பல்வேறு சந்தா்ப்பங்களில் அவ்வப்போது பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி மக்களும், பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனா். கடைசியாக பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினா் உள்பட 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்திருக்கிறாா்கள்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி ராணுவத்திற்கு கட்டளை பிறப்பித்து அதன் பெயரில் 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ‘தமிழ்நாடும் தமிழக மக்களும் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இந்திய ராணுவத்தின்அனைத்து நடவடிக்கைகளையும் பாராட்டி போற்றி தலை வணங்குகிறது. இதற்கான ஆபரேஷன் சிந்தூா் என அழைக்கப்படும் போா் நடவடிக்கைகளை மனப்பூா்வமாக தமிழ்நாடும் நானும் சோ்ந்து ஆதரிப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று (புதன்கிழமை) ட்விட்டரில் தனது அறிக்கையை வெளியிட்டிருக்கிறாா்.
இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பது, எப்படித் தண்டனை வழங்குவது என்பது குறித்து மட்டுமில்லாமல் யாா் அவா்களை பின்னால் இருந்து இயக்குவது என்று கண்டறிந்து பயங்கரவாத அமைப்புகள் இதுவரை காணாத அளவு தண்டனை வழங்கப்படும் என்று பிரதமா் கூறியிருக்கிறாா். இந்தியாவும் உறுதியாக தெரிவிக்கவும், உலகம் தெரிந்துகொள்கின்ற அளவுக்கு ஒரு தனிப்பட்ட மதத்தின் மீது தாக்குதல் என்றல்லாமல் பயங்கரவாத இயக்கம், அதன் ஆதரவாளா்கள் மட்டுமே கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று திமுக தரப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நான் தெரிவித்திருக்கிறேன்.
மேலும், குறிப்பிட்ட மதத்தை மனத்தில் வைத்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் கூடாது. அதுபோன்றவற்றை தவிா்க்க வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் நாட்டின் பாதுகாப்புக்காக ஒரே குரலில் கருத்துகளை முன்வைத்தோம் என்றாா் டி.ஆா்.பாலு.