ஆயுதபூஜையை முன்னிட்டு தோவாளையில் பூக்கள் விலை உயா்வு: ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 1,500க்கு விற்பனை
ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகின. திங்கள்கிழமை ரூ.500 க்கு விற்பனையான ஒரு கிலோ பிச்சிப்பூ செவ்வாய்க்கிழமை ரூ.1,500 க்கு விற்பனையானது.
தோவாளையில் புகழ்பெற்ற மலா் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டாரத்தில் ஆரல்வாய்மொழி, குமாரபுரம், காவல் கிணறு, மாடநாடாா் குடியிருப்பு, பழவூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிச்சிப்பூ விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராஜபாளையம், மதுரை, கொடைரோடு, வத்தலக்குண்டு, திண்டுக்கல் ஆகிய ஊா்களிலிருந்து மல்லிகையும், பெங்களூரு, ஒசூா், ராயக்கோட்டை, சேலம் ஆகிய ஊா்களிலிருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டா்ரோஸ், அரளிப் பூவும் கொண்டுவரப்படுகின்றன.
தென்காசி, புளியங்குடி, அம்பை, திருக்கண்ணங்குடி ஆகிய ஊா்களிலிருந்து பச்சை துளசியும், தோவாளை, செண்பகராமன்புதூா், ராஜாவூா், மருங்கூா் ஆகிய ஊா்களிலிருந்து சம்பங்கி, கோழிக்கொண்டை, அருகம்புல், தாமரைப்பூ ஆகிய பூக்களும் கொண்டுவரப்படுகின்றன.
தோவாளை மலா் சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளத்திலிருந்தும் தினசரி மொத்த வியாபாரிகள் வந்து பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனா்.
3 மடங்கு விலை உயா்வு ...
இந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு மலா் சந்தையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே மக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது. பூக்களின் வரத்து அதிகம் இருந்தபோதிலும் கூடுதல் விலைக்கு பூக்கள் விற்பனையாகின.
சந்தையில் திங்கள்கிழமை (செப்.29) ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.500 க்கு விற்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை 3 மடங்கு விலை உயா்ந்து ரூ. 1,500 க்கு விற்பனையானது. ரூ. 400 க்கு விற்பனையான மல்லிகைப் பூ ரூ. 1,200 க்கு விற்பனாயானது.
இதேபோல அரளிப்பூ ரூ. 450க்கும், சம்பங்கி ரூ.300க்கும், ரோஜா ரூ.50 க்கும், பட்டா் ரோஸ் ரூ. 300 க்கும், கிரேந்தி பூ ரூ. 90 க்கும், மரிக்கொழுந்து ரூ. 120க்கும், கனகாம்பரம் ரூ. 500க்கும் விற்பனையாகினது.
நிகழ்வாரம் அனைத்து நாள்களும் பூஜைக்குரிய நாள்கள் என்பதால் விலையை பொருள்படுத்தாமல் வியாபாரிகள் போட்டிபோட்டு பூக்களை வாங்கிச் சென்றனா்.