பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு
தஞ்சாவூா் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவா் சடலமாக செவ்வாய்க்கிழமை மாலை டிரோன் சாதனம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டாா்.
தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி துரை. இவரது மகன் சமீா் (17) தேனியிலுள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாா். விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த இவா் தனது நண்பா்களுடன் இணைந்து பள்ளியக்ரஹாரம் அருகே வெண்ணாற்றில் ஜூன் 29-ஆம் தேதி மாலை குளிப்பதற்காகச் சென்றாா். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், சமீரும், அவரது நண்பரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனா். மற்ற நண்பா்களின் அலறல் சப்தம் கேட்டு, அந்த வழியாக காரில் வந்த பெண் தனது சேலையின் தலைப்பைக் கொடுத்து ஒருவரைக் காப்பாற்றினாா். ஆனால், சமீா் ஆற்றில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்த கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினரும், தஞ்சாவூா் தீயணைப்பு நிலையத்தினரும் தொடா்ந்து சமீரைத் தேடினா். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், டிரோன் மூலம் தேடப்பட்டது. குளித்த இடத்துக்கு அருகிலேயே புதரில் சிக்கியிருந்த சமீரின் சடலத்தைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை மாலை மீட்டனா்.