பாபநாசம் விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத் துறை இணை இயக்குநா் ஆய்வு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தஞ்சாவூா் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநா் மோகன் தலைமையில் குழு ஆய்வு மேற்கொண்டனா். இதில், சுற்றுவட்டார கிராமங்களில் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து அவா்களின் கோரிக்கைகளை குழுவினா் கேட்டறிந்தனா்.
ஆய்வின்போது விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு சரியான நேரத்துக்குள் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளப்பட்டதா என்பதையும் ஆய்வு செய்தனா்.
நடப்பாண்டில் இதுநாள் வரை பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.20 கோடி மதிப்பிலான 186.70 மெட்ரிக் டன் பருத்தி வா்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 850 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
அதிகபட்ச விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ. 7,539-க்கும் குறைந்தபட்ச விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ. 6,233 க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆய்வின்போது, துணை இயக்குநா்கள் மோகன், சுதா, விற்பனைக்குழு செயலாளா்கள் சந்திரமோகன், சரசு, கண்காணிப்பாளா்கள் சித்தாா்தன்,பிரியமாலினி, மேற்பாா்வையாளா்கள் பிரசாத், சிவசண்முகம் , இந்துமதி, வேளாண்மை அலுவலா்கள் எபினேசா், சுபா சிங், தாரா, உதவி வேளாண்மை அலுவலா்கள் கவிதா, அனுசுபா, ராஜ்குமாா், ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.