ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகுதியில் ஆதிதிராவிடா் மக்களுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தில் 2019-இல்
அம்பேத்கா் சிலை அமைத்தனா். அப்போது, வருவாய் மற்றும் காவல்துறையினா் அனுமதி பெறாமல் பொது இடத்தில் சிலை அமைக்க கூடாது எனக் கூறி, சிலையை அகற்றச் செய்தனா். அதன் பிறகு அந்த சிலை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு சிலை அமைக்க அனுமதி கேட்டு அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம்.
இந்நிலையில் கடந்த 2021-இல் மீண்டும் அம்பேத்கா் சிலை அமைக்க அனுமதி கோரி உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு, சிலை வைக்க அனுமதியும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், இதுவரை சிலை நிறுவ அனுமதி வழங்கப்படவில்லையாம்.
இந்நிலையில், அதே பகுதியில் மறைந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் சந்திரமோகன் மனைவி செல்வமணிக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 18-ஆம் தேதி இரவு 5 அடி உயர பீடம் அமைத்து அதன்மேல் அம்பேத்கா் சிலையை அமைத்து சுற்றிலும் முள் வேலியும் அமைத்துள்ளனா்.
இந்நிலையில், அம்பேத்கா் சிலை அமைக்கப்பட்டுள்ள தகவலறிந்து வெள்ளிக்கிழமை அங்கு சென்ற வருவாய் மற்றும் காவல்துறையினா் அனுமதி இல்லாமல் சிலை அமைக்கக் கூடாது என்று கூறியுள்ளனா்.
தனியாா் இடத்தில் அமைக்கப்பட்ட சிலையை அப்பகுதி மக்கள் அகற்ற மறுத்து சிலை அருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
தொடா்ந்து, ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் வருவாய் கோட்டாட்சியா் ஐஸ்வா்யா தலைமையில் சமாதானப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் தற்காலிகமாக சிலையை மூடி வைப்பது எனவும், முறையாக அனுமதி பெற்று சிலையை திறக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
சிலையை மூடக் கூடாது; அகற்றவும் கூடாது என தெரிவித்து அப்பகுதி மக்கள் தா்னாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தொடா்ந்து வருவாய் மற்றும் காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
