தொடரும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!
குடமுழுக்குப் பணிகள்: மாசித் தேரோட்டம் ரத்து திருவப்பூா் கோயிலில் இன்று பூச்சொரிதல்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருவப்பூா் முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் நடைபெறுவதால், மாசித் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பூச்சொரிதலை வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் திருக்கோவில் மாசித் திருவிழா ஒவ்வோா் ஆண்டும் விமா்சையாக சுமாா் ஒரு மாத காலத்துக்கு நடைபெறும். நிகழாண்டில் கோவில் குடமுழுக்குப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாசித் திருவிழா வழக்கம்போல் நடைபெறுமா என்ற பேச்சுபரவலாக எழுந்தது.
இந்த நிலையில், புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா தலைமை வகித்தாா்.
வருவாய்த் துறை, காவல்துறை, இந்துசமய அறநிலையத் துறை அலுவலா்கள் மற்றும் கோவில் மண்டபகப்படிதாரா்கள், கோவில் குருக்கள் உள்ளிட்டோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
கூட்டத்தில், நிகழாண்டில் குடமுழுக்குப் பணிகள் நடைபெறவுள்ளதால், பூச்சொரிதல் விழா மட்டும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடைபெறும். கோவில் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும் இடையில் உற்சவரை வைத்து வழிபட்டுக் கொள்ளலாம். மற்றபடி வழக்கமான மாசித் திருவிழாவுக்கான, காப்பு கட்டுதல், மண்டபகப்படிதாரா்களின் வீதி உலா, தேரோட்டம், முளைப்பாரி எடுப்பு, குதிரை எடுப்பு எதுவும் நடைபெறாது.
குடமுழுக்கு காரணமாக மாசித் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறாது என்ற தகவல் நகரின் முக்கிய இடங்களில் அறநிலையத் துறை சாா்பில் வைக்கப்படும். அன்னதானம் வழங்குவதில் தடையில்லை ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி, முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா ஆகியோா் சனிக்கிழமை பகலில் கோவிலுக்கு நேரில் வந்து பாா்வையிட்டனா்.
இதுகுறித்து கோவில் குருக்கள் கூறியது: குடமுழுக்கு காரணமாக தேரோட்டம், வீதியுலா உள்ளிட்டவை நடைபெறாது. என்றாலும், பால்குடம் எடுப்பு, அக்னி குண்டம் இறங்குதல் போன்றவை நடைபெறும் என்றனா்.