`ஆல்பாஸ் திட்டம் ரத்து; மனுதர்மத்தை புதுப்பிக்கும் முயற்சி’ - மத்திய அரசை சாடும் கி.வீரமணி
5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்களுக்கு 2 மாதங்களுக்குள் மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தோல்வி அடையும்பட்சத்தில் மீண்டும் அதே வகுப்பிலேயே அவர்கள் தொடர்வார்கள் என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்த ஈரோட்டுக்கு வந்திருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளரிடம் பேசுகையில், " மத்திய அரசு 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்புகளுக்கான ஆல்பாஸ் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த அறிவிப்பை மாநில அரசு ஏற்றுக் கொள்ளாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெளிவுபடுத்திவிட்டார்.
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பை தகர்க்கும் விதமாகதான் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஆர்.எஸ்.எஸின். மறைமுகம் திட்டம். நெஸ்ட், விஸ்வகர்மா யோஜனா தேர்வு படி பார்த்தால் கல்லூரிக்கு போக முடியாத வகையில் தேர்வுகள் இருந்தது. பெரியார் கொள்கையைப் பின்பற்றக் கூடிய முதல்வர் ஸ்டாலின் தெளிவாக உள்ளதால், இந்த விவசயத்தில் மாறவும் மாட்டார். தோழமைக் கட்சிகளுக்கும் அதே கருத்து உள்ளதால் அவர்களும் மாறமாட்டார்கள்.
இந்தியாவில் அனைத்துக்கும் தமிழ்நாடு தான் வழிக்காட்டியாக உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கல்வியில் தனித்தன்மை கொண்டது தமிழ்நாடு. மத்திய அரசின் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான ஆல்பாஸ் திட்டத்தை ரத்து செய்தது என்பது மனு தர்மத்தை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி” என்றார்.