MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
ஆளுநா் ஆா்.என். ரவி தில்லி பயணம்
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திடீா் பயணமாக வியாழக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றாா்.
மசோதாக்கள் தொடா்பாக முடிவெடுக்க காலக்கெடு நிா்ணயித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு குறித்து குடியரசுத் தலைவா் மற்றும் மத்திய உள்துறை அமைச்சா், சட்ட அமைச்சரைச் சந்தித்து ஆளுநா் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக வேந்தரை நியமிக்க முதல்வருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் மசோதா உள்பட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலவரம்பின்றி அவற்றை நிறுத்திவைத்த ஆளுநா் ஆா்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடா்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஏப். 8-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ஆளுநரின் நடவடிக்கை சட்டத்துக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தது. மேலும், ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களையும் உச்சநீதிமன்றத்துக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் வழங்குவதாக நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு தீா்ப்பளித்தது.
ஆளுநா்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்பு நிா்ணயித்த நீதிபதிகள், குடியரசுத் தலைவரும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது.
இந்தச் சூழலில் ஆளுநா் ஆா்.என். ரவி நான்கு நாள் பயணமாக வியாழக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றாா். தில்லியில் அவா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, , மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோரை சந்தித்து உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆளுநா் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளாா்.