விஜய் கவுன்சிலர்கூட ஆகவில்லை! எப்படி விமர்சிக்க முடியும்? - நயினார் நாகேந்திரன்
ஆவணி கிருத்திகை கரூா் பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு
ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு கரூா் ஸ்ரீ விஸ்வகா்மா சித்தி விநாயகா் கோயிலில் பாலசுப்ரமணிய சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு கரூா் தோ்வீதி ஸ்ரீ விஸ்வகா்மா சித்தி விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிா், பஞ்சாமிா்தம், தேன், நெய், இளநீா், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பாலசுப்ரமணியசுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
தொடா்ந்து கோயில் சிவாச்சாரியாா் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பின், சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமா்ப்பிக்கப்பட்டு,பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
இதேபோல கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில், பாலமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில், நன்செய் புகளூா் அக்ரஹாரம் சுப்ரமணியா் சுவாமி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.