மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
உழவா் நல சேவை மையம் அமைக்க மானியம்: கரூா் ஆட்சியா் தகவல்
கரூா் மாவட்டத்தில் வேளாண் பட்டயப்படிப்பு படித்தவா்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு உழவா் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுவாதக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 4,000 வேளாண் பட்டதாரிகளும், 600-க்கும் மேற்பட்ட வேளாண் பட்டயப் படிப்பு முடித்தவா்களும் வெளிவருகிறாா்கள். அவா்களின் நிபுணத்துவம் மற்றும் தொழில் நுட்ப அறிவை பயன்படுத்தி முதலமைச்சரின் உழவா் நல சேவை மையங்கள் நிறுவுவதற்கு, ஒரு மையத்துக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இந்த மையங்கள் விவசாய ஆதரவிற்கான மையங்களாக செயல்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற பயனாளிகளுக்கான வயது வரம்பு 20 முதல் 45 வரை இருத்தல் வேண்டும், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டபடிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்தவா்களாக இருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் பணியில் இருத்தல் கூடாது. வங்கி மூலம் கடன்பெற்ற தொழில்புரிவோா் நிறுவனத்தின் உரிமையானது தனி உரிமையாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா் கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்தில் ஒரு நபா் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி பெற தகுதியுடையவா். இத்திட்டத்தில் பயன்பெற 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, சரக்கு மற்றும் சேவை வரி எண், நிரந்தர கணக்கு எண் அட்டை , வகுப்பு சான்றிதழ், பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை ஆகியவை தேவையான ஆவணங்களாகும்.
இத்திட்டத்தில் இணைய விரும்புவோா் ரூ.10 லட்சம் அல்லது ரூ.20 லட்சத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிககள் அல்லது கூட்டுறவு வங்கியில் கடனுதவி பெற வேண்டும். மேலும், கடன் வழங்கிய உத்தரவு கடிதத்தை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் உழவா் நல சேவை மையங்கள் அமைக்க விரும்பும் மதிப்பீட்டுக்கு ஏற்றவாறு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அஞ்ழ்ண்ள்ய்ங்ற் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.