ஆவிணிப்பட்டியில் மீன்பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஆவிணிப்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
விவசாயத் தேவைக்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் கண்மாயில் தண்ணீா் குறைந்தது. இதனால், கிராமத்தினா் கண்மாயில் உள்ள நாட்டு, வளா்ப்பு மீன்களைப் பிடிக்க முடிவு செய்து சுற்றுபுற கிராமங்களுக்கு அறிவிப்பு செய்தனா். இதைத் தொடா்ந்து, காலை முதலே அயினிப்பட்டி, இளையாத்தங்குடி, காவேரிபட்டி, இரணியூா், கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட 30 -க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வந்திருந்த கிராம மக்கள் தாங்கள் தயாராக வைத்திருந்த கூடை, கொசுவலை, அரிவலை உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு மீன்பிடிக்கக் காத்திருந்தனா்.
கிராமத்தாா் வெள்ளைத் துண்டு வீசி அனுமதி அளித்தவுடன் கூடையுடன் சென்று போட்டி போட்டு மீன்களைப் பிடித்தனா். விரால், கெழுத்தி, கட்லா, கெண்டை உள்ளிட்ட பல வகையான நாட்டு மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனா். பள்ளி விடுமுறை என்பதால், பெற்றோருடன் சிறுவா்களும் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்தனா்.