ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு ஆஸி. டாப் ஆர்டர் தயாரா? ஸ்டூவர்ட் பிராட் கேள்வி!
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் தயாராக இருக்கிறதா என இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின், ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக பல்வேறு வீரர்களை முயற்சி செய்தும், பெரிய அளவில் பலனடையவில்லை என்றே கூறலாம். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரருக்கான பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் மட்டுமின்றி, ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரும் அந்த அணிக்கு கவலையளிப்பதாக இருந்து வருகிறது.
ஆஷஸ் தொடருக்கு டாப் ஆர்டர் தயாரா?
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் தயாராக இருக்கிறதாக என இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் அவர் பேசியதாவது: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் இந்த அளவுக்கு இருந்ததில்லை என நினைக்கிறேன். அந்த அணியின் டாப் ஆர்டர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். மேத்யூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் போன்ற வீரர்களுடன் விளையாடிய அனுபவத்திலிருந்து இதனைக் கூறுகிறேன்.
உஸ்மான் கவாஜா தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். கேமரூன் கிரீன் அவருடைய இடத்தில் களமிறக்கப்படாமல் மூன்றாவது இடத்தில் களமிறக்கப்படுகிறார். மார்னஷ் லபுஷேன் மிகவும் சிறந்த வீரர். ஆனால், அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடுமாறி வருகிறார். மீண்டும் சிறப்பான ஃபார்முக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.
சாம் கான்ஸ்டாஸ் இளம் வீரர். அவர் தற்போது பல விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறார். மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும். அதனால், கான்ஸ்டாஸ் ரன்கள் குவிக்க சிரமப்படுகிறார். ஆஷஸ் தொடரில் அவர் நன்றாக ரன்கள் குவிப்பார் என நம்புகிறேன்.
நான்காவது இடத்தில் விளையாடும் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஐந்தாவது இடத்தில் களமிறங்கும் டிராவிஸ் ஹெட்டினை பாதுகாக்கும் வழியினை ஆஸ்திரேலிய அணி கண்டுபிடிக்க வேண்டும். அலெக்ஸ் கேரி 7-வது இடத்தில் சிறப்பாக விளையாடுகிறார். ஆட்டத்தில் சீக்கிரமாக ஸ்டீவ் ஸ்மித் களமிறங்காமல் இருப்பதை டாப் ஆர்டர் உறுதி செய்ய வேண்டும். குறைந்தது புதிய பந்தில் டாப் ஆர்டர் 35 ஓவர்கள் விளையாடிய பிறகு, ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்றார்.
ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 12) கிங்ஸ்டனில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Former England fast bowler Stuart Broad has questioned whether Australia's top order is ready for the Ashes Test series.
இதையும் படிக்க: லண்டன் லார்ட்ஸ் திடல் எம்சிசி அருங்காட்சியகத்தில் சச்சின் உருவப்படம் திறப்பு!