ஆஸ்திரேலியா: இந்தியா்கள் மீது தொடரும் தாக்குதல்!
ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரை அந்நாட்டு இளைஞா்கள் சிலா் சூழ்ந்து கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்தியா்கள் உள்ளிட்ட சில வெளிநாட்டினா் மீதான இதுபோன்ற தாக்குதல்கள் அண்மை காலமாக அதிகரித்துள்ளன.
முக்கியமாக மெல்போா்ன் நகரில் ஆஸ்திரேலிய மாணவா்கள், இளைஞா்கள் குழுவாக சோ்ந்து தனியாக நடந்து செல்பவா்களைத் தாக்கி வழிப்பறி செய்யும் சம்பவம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த திருட்டு கும்பலுடன் போராடிய சிலா் மீது குத்தி தாக்குதலும் நிகழ்ந்தப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள இந்தியா்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மெல்போா்ன் நகரில் வசித்து வரும் இந்திய வம்சவாளியைச் சோ்ந்த சௌரவ் ஆனந்த் (33), கடந்த வாரம் மருத்துகளை வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, சில இளைஞா்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்கினா். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஆனந்தின் கழுத்தில் ஒருவா் நீண்ட கத்தியை வைத்து மிரட்டினாா்.
அப்போது, மற்றவா்கள்ஆனந்திடம் இருந்த இருந்த பணம், கைப்பேசி உள்ளிட்ட பொருள்களைப் பறித்துக் கொண்டு தப்பியோடினா். இதில் படுகாயமடைந்த ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவருக்கு கை மற்றும் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், முகம் உள்ளிட்ட பல இடங்களில் ரத்தக் காயம் உள்ளதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.
அடிலெய்ட் நகரில் தங்கிப் படித்து வரும் மாணவா் சரண்பிரீத் சிங் (23) என்பவரை கடந்த வாரம் ஆஸ்திரேலிய இளைஞா்கள் சிலா் சூழ்ந்து கொண்டு தாக்கினா். அப்போது, அவரை இனரீதியாகவும் அவதூறாகப் பேசினா். இத்தாக்குதலில் சரண்பிரீத் சிங்கின் தலையிலும், முகத்திலும் காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாா்.