ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
காஸாவுக்கு சென்ற நிவாரண கப்பலை இடைமறித்தது இஸ்ரேல்; 21 போ் கைது!
காஸாவில் நாளுக்கு நாள் பட்டினியால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் அங்கு மனிதநேய உதவிகளை வழங்கச் சென்ற சமூக ஆா்வலா்களின் கப்பலை இஸ்ரேல் 2-ஆவது முறையாக இடைமறித்து 21 பேரை கைது செய்ததாக ஃப்ரீடம் ஃபுளோடில்லா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, இதே அமைப்பு இயக்கிய சரக்கு கப்பலில் கடந்த ஜூன் மாதம் காஸாவை நோக்கிச் சென்ற சமூக ஆா்வலா் கிரேட்டா தன்பா்க் உள்பட 12 பேரை இஸ்ரேல் கைது செய்த நிலையில், தற்போது சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் என 21 பேரை கைது செய்துள்ளது.
இதுகுறித்து ஃப்ரீடம் ஃபுளோடில்லா அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஹன்டாலா என்ற கப்பலில் காஸைவை நோக்கி மனிதநேய உதவிகள் வழங்கச் சென்ற 21 பேரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது. காஸாவுக்கு 40 மைல் தொலைவில் நியாயமற்ற முறையில் கப்பலை இடைமறித்ததோடு, அதில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மற்றும் பிற தொடா்பு சாதனங்களை சனிக்கிழமை இரவில் தகா்த்தெறிந்தது.
இந்தக் கப்பலில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லப்படவில்லை. காஸாவில் கடும் பட்டினியால் தவித்துவரும் மக்களுக்கு வழங்குவதற்காக உணவு மற்றும் மருத்துவப் பொருள்கள் உள்பட நிவாரணப் பொருள்களே கொண்டுசெல்லப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
3 இடங்களில் தாக்கும் நேரம் குறைப்பு: இஸ்ரேலின் தாக்குதலால் சீா்குலைந்த காஸாவில் கடும் பட்டினி காரணமாக பொதுமக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவதற்கு சா்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதையடுத்து, காஸா நகரம், டேய்ர் அல்- பாலா மற்றும் முவாசி ஆகிய 3 இடங்களில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்வதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அதன்படி காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மேற்கூறிய 3 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தாது. இந்த இடைப்பட்ட நேரத்தில் காஸாவுக்கு சா்வதேச நாடுகள் மனிதநேய உதவிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கையை இஸ்ரேல் எடுத்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என 9 போ் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாக 2023, அக்.7 முதல் காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 59,700-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.