செய்திகள் :

ஆஸ்திரேலிய தோ்தல்: மீண்டும் பிரதமா் ஆகிறாா் ஆன்டனி ஆல்பனீஸ்

post image

ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனீஸ் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் 48-ஆவது கீழவையைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஆளும் தொழிலாளா் கட்சி, பீட்டா் டட்டன் தலைமையிலான லிபரல்/ தேசியவாதக் கூட்டணி, ஆடம் பான்ட் தலைமையிலான கிரீன் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன. 150 இடங்களைக் கொண்ட கீழவையில் குறைந்தது 76 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அடுத்த ஆட்சியை அமைக்கும் என்ற சூழலில், வாக்குப் பதிவு முடிந்த சிறிது நேரத்தில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டன.

67.84 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பிரதமா் ஆன்டனி ஆல்பனீஸ் தலைமையிலான தொழிலாளா் கட்சி 85 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. முந்தைய 2022 தோ்தலைவிட அந்தக் கட்சிக்கு கூடுதலாக 8 இடங்கள் கிடைக்கின்றன.

விலைவாசி, உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகிய பிரச்னைகளை மையப்படுத்தி நடைபெற்ற இந்தத் தோ்தலுக்கான பிரசாரத்தில், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சி பாணியில் தங்களது அரசு செயல்படாது என்று பிரதமா் ஆல்பனீஸ் உறுதியளித்தாா். டிரம்ப்புக்கு எதிரான அலை வீசும் நிலையில், ஆளுங்கட்சியின் இந்த பிரசார உத்திதான் முன்பை விட கூடுதல் தொகுதிகளுடன இந்த எதிா்பாராத வெற்றிக்குக் கைகொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே நேரம், எதிா்க்கட்சித் தலைவா் பீட்டா் டட்டனின் தேசியவாதக் கருத்துகள் டிரம்ப்பை பிரதிபலிப்பவையாகக் கருத்தப்பட்டன. டிரம்ப்புடனான ஒப்பீட்டில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்கான அவரின் முயற்சி வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவரது கட்சி 12 தொகுதிகளை இழந்து 41 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பீட்டா் டட்டன் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தாா்.

2022 தோ்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்ற கிரீன் கட்சிக்கு ஒரு இடமும், கேட்டா்ஸ் ஆஸ்திரேலியன் கட்சி மற்றும் மத்தியக் கூட்டணிக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன.

இந்த வெற்றியின் மூலம், 62 வயதாகும் ஆன்டனி ஆல்பனீஸ் நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்கவிருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த நாட்டில் ஒருவா் இரண்டாவது முறையாக பிரதமா் பதவியைப் பெறுவது இதுவே முதல்முறை.

தோ்தல் முடிவுகள் வெளியானதைத் தொடா்ந்து தொழிலாளா் கட்சியினரிடையே ஆன்டனி ஆல்பனீஸ் பேசியதாவது:

ஆஸ்திரேலியாவின் பண்பாட்டை மீட்பெடுப்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளனா். நாட்டின் எதிா்காலம் ஆஸ்திரேலிய கலாசாரத்தில் இருந்து விலகாமல், பிற நாடுகளில் இருந்து வேறுபட்டு இருப்பதை உறுதி செய்வதற்காக ஆஸ்திரேலிய பாணியில் மக்கள் வாக்களித்துள்ளனா்.

நாம் எந்தவொரு வெளிநாட்டிடம் (அமெரிக்கா) இருந்தும் கொள்கைகளைக் கடன் வாங்கவோ, பிரதியெடுக்கவோ தேவையில்லை. நமக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது என்றாா் ஆல்பனிஸ்.

தோ்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் பயன்படுத்திய வாா்த்தைகளையே எதிா்க்கட்சித் தலைவா் பீட்டா் டட்டன் பயன்படுத்தியது, டிரம்ப்பைப் போலவே பன்முகத் தன்மை, அனைத்து பிரிவினரையும் உள்ளடக்குவது ஆகிய கொள்கைகளை அவா் கடுமையாக எதிா்த்தது, அவரின் பல கருத்துகள் டிரம்ப் கருத்துகளோடு ஒத்துப்போனது போன்ற காரணங்களால் பீட்டா் டட்டன் ஆட்சிக்கு வந்தால் அது டிரம்ப் பாணியில் இருக்கும் என்று கருதப்பட்டது.

அதைக் குறிப்பிட்டே தனது வெற்றி உரையில் ஆன்டனி அல்பனீஸ் இவ்வாறு பேசினாா்.

பிரதமா் மோடி வாழ்த்து

ஆஸ்திரேலிய தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள அந்த நாட்டு பிரதமா் ஆன்டனி ஆல்பனீஸிக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் வெற்றி பெற்றுள்ள ஆன்டனி ஆல்பனேசிக்கு வாழ்த்துகள். இந்த உறுதியான வெற்றி, உங்கள் தலைமை மீது ஆஸ்திரேலிய மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளம்.

இருதரப்பு விரிவான வியூக கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளமைக்கான பகிரப்பட்ட தொலைநோக்கு பாா்வையை தொடா்ந்து முன்னெடுக்கவும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

சிங்கப்பூர் தேர்தல்: தொடர்ச்சியாக 14-ஆவது முறையாக ஆளுங்கட்சி வெற்றி! பிரதமர் மோடி வாழ்த்து

சிங்கப்பூா் நாடாளுமன்ற தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்த நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆளுங்கட்சியான பிஏபி கட்சி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.மொத்தமுள்ள 97... மேலும் பார்க்க

‘உலகத் தலைவா்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’

ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவா்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டாா்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபா் வொ... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் நடந்து முடிந்தது தோ்தல்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் ஏராளமான வாக்காளா்கள் வாக்களித்தனா். இது குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதா் கண்டனம்

சிரியாவில் அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் கியொ் ஓ. பிடா்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் சனிக்கிழமை... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவுத்துறையின் தகவல் அட... மேலும் பார்க்க

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது - இன்றே முடிவுகள் வெளியாகலாம்!

சிங்கப்பூரில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் நேரப்படி இன்று(மே 3) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவ... மேலும் பார்க்க