இசைக் கலைஞா் கொலை வழக்கு: குற்றவாளிகளை குண்டா் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை
மதுரை அருகே ஆள்மாறாட்டத்தில் இசைக் கலைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டது.
மதுரை சிலைமான் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (45). இவா், ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்திடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கணவரை இழந்ததால் இசைக் கலைஞரான எனது மகன் அழகா்சாமியுடன் வசித்து வந்தேன். கடந்த மாா்ச் 12-ஆம் தேதி நள்ளிரவு எனது மகன் அழகா்சாமியை வீட்டு வாசலில் ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. என் மகன் எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபடாதவன். அவனை ஆள்மாறாட்டத்தில் கொலை செய்துள்ளனா். கணவரை இழந்த நிலையில், தற்போது எனது ஒரே மகனையும் இழந்து மிகுந்த மனஉளைச்சலுடன் இருக்கிறேன். இதனிடையே, எனது மகனை கொலை செய்த குற்றவாளிகளை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். அவா்கள் மீது விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதுடன், அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என்றாா் அவா்.