மயிலாடுதுறை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 425 மனுக்கள் அளிப்பு
இந்தியர்களுக்கு இதய நோய் அதிகம் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?
இந்தியர்களுக்கு இதய நோய் அதிகம் ஏற்பட என்ன காரணம்? என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், இதயம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் அதிகம் ஏற்பட அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களும் காரணமாயிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் ‘கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்’, சென்னையின் ‘தி மெட்ராஸ் டையபட்டீஸ் ரீசெர்ச் ஃபௌண்டேசன்’ ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ள ஆய்வு முடிவுகள் ‘தி லேன்செட் ரீஜினல் ஹெல்த் சௌத்ஈஸ்ட் ஏசியா’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில் சர்க்கரை உள்ளிட்ட பல பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. தொழிற்சாலைகளில் பல கட்ட பதப்படுத்துதல் முறைகளைக் கடந்து, அவை இறுதியாக பொட்டலங்களில் அடைக்கப்பட்டு அல்லது வேறு வடிவங்களில் விற்பனைக்கு வருகின்றன. உடல் பருமன் அல்லது இயல்பைவிட அதிகமாக உடல் எடை அதிகரித்தல், அன்றாட உடல் இயக்கத்தில் பாதிப்புகள்(மெட்டபாலிக் டிஸ்ஆர்டர்ஸ்), நீரிழிவு பிரச்சினை, இவற்றைவிட முக்கியமாக இதயம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் அதிகம் ஏற்பட இவ்வகை உணவுகள் காரணமாயிருக்கின்றன என்று தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், ஒரு தனி நபர் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலம் அவரது உடலுக்கு கிடைக்கும் மொத்த ஆற்றலில் 13 - 17 சதவீதம், அவர் உண்ணும் அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் (அல்ட்ரா ப்ராசஸ்டு ஃபுட்ஸ்) மூலம் கிடைக்கப் பெறுகிறது என்று தெரிய வந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில் அதிகம் பேர் விரும்பி அதிகளவில் எடுத்துக்கொள்வது பிஸ்கட்ஸ் என்பதும் தெரிய வந்துள்ளது.
பிஸ்கட்ஸ் தவிர்த்து, உப்பு அதிகம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் ஸ்நாக்ஸ் வகையிலான சிற்றுண்டி உணவுகளை தென்னிந்தியாவில் மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களைவிட பெண்களே இவ்வகை உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை அதிகம் சாப்பிடும் மக்களை சில பாகுபாடுகளின் அடிப்படையில் பிரித்து பார்க்கும்போது, திருமணமானவர்கள் அல்லது லிவிங்-டு-கெதர் முறையில் சேர்ந்து வாழ்பவர்கள் இவ்வகை உணவுகளை ஒப்பீட்டளவில் குறைவாகவே எடுத்துக்கொள்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. ஆக மொத்தம்... சிங்கிள் பசங்க என்று வெளியே சொல்லிக்கொள்ளும் திருமணமாகா தனி நபர்களே (அது ஆண்களாயினும்/பெண்களாயினும் சரி) அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை சாப்பிடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆறுதலான தகவல் என்னவென்றால், வட இந்தியாவை ஒப்பிடும்போது தென் இந்தியாவில், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்பவர்களின் விகிதம் குறைவாகவே இருப்பதாக மேற்கண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.