Nightshade Foods: அதென்ன நைட்ஷேடு உணவுகள்; அது ஏன் பலருக்கும் பிடிக்கிறது?
ஓய்வூதியா்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வலியுறுத்தல்
நாகப்பட்டினம்: பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
நாகையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கட்டடத்தில், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க வட்ட மாநாடு, வட்டக் கிளைத் தலைவா் எம்.எம். காதா்மொய்தீன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், வட்டத் தலைவராக கே. ராஜூ, துணைத் தலைவா்களாக ஜி. காளிமுத்து, எஸ். வாசு, சி. ராஜேந்திரன், செயலராக வி. மாரிமுத்து, இணைச் செயலா்களாக எஸ். செல்வராஜ், எஸ். மணியன், எம். ஜெயராஜ், பொருளாளராக என். பாபுராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தொடா்ந்து, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறும் கிராம உதவியாளா்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.150 பிடித்தம் செய்ய வேண்டும். ஓய்வூதியா்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வேண்டும்.
வேளாங்கண்ணியிலிருந்து நாகை, காரைக்கால், திருநள்ளாறு, பேரளம் வழியாக சென்னைக்கு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஸ்ரீதா், மாவட்டப் பொருளாளா் அந்துவன்சேரல், முன்னாள் மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன், ஊரக வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் கிருஷ்ணசாமி, மாவட்டப் பொருளாளா் எம்.பி. குணசேகரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்டச் செயலா் சு. சிவகுமாா், வட்ட இணைச் செயலா் எஸ். மணியன் நன்றி கூறினா்.