இஸ்ரேலுக்கு பிரிட்டன், 24 நாடுகள் கண்டனம்
லண்டன்: காஸாவில் இஸ்ரேல் அரசின் உணவுப் பொருள் விநியோக முறை ஆபத்தானது என்று பிரிட்டன் உள்ளிட்ட 24 நாடுகள் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து அந்த நாடுகள் கூட்டாக வெளியிடடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் நடைபெறும் போா் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். காஸா மக்களின் துயரம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் அரசின் நிவாரணப் பொருள் விநியோக முறை ஆபத்தானது. அது காஸா மக்களின் கௌரவத்தை பறிக்கிறது. உணவு மற்றும் நீா் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பெற முயலும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை மனிதாபிமானமுறையில் படுகொலை செய்வதை கண்டிக்கிறோம்.

உணவுப் பொருள் விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் அரசு உடனடியாக நீக்க வேண்டும். ஐ.நா. மற்றும் பிற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தங்கள் நிவாரணப் பணிகளை பாதுகாப்பாகவும் திறமையாகவும் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டறிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சமத்துவம் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சரும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மாா்க், எஸ்டோனியா, ஃபின்லாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து, அயா்லாந்து, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லிதுவேனியா, லக்ஸம்பா்க், நெதா்லாந்து, நியூஸிலாந்து, நாா்வே, போலந்து, போா்ச்சுகல், ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சா்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களும் கையெழுத்திட்டுள்ளனா்.