Nightshade Foods: அதென்ன நைட்ஷேடு உணவுகள்; அது ஏன் பலருக்கும் பிடிக்கிறது?
‘ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள்’
திருவாரூா்: ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள் சென்று விட்டதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பிஆா். பாண்டியன் தெரிவித்தாா்.
திருவாரூரில், எதிா்க்கட்சித் தலைவரும்,அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமியை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தபின் செய்தியாளா்களிடம் கூறியது:
நில ஒருங்கிணைப்புச் சட்டம் மூலம் விவசாயிகளுடைய நில உரிமையை பறித்து விட்டது. குத்தகை விவசாயிகளை காப்பீடு செய்ய முடியாமலும், கடன் பெற முடியாத நிலைமைக்கும் சென்று, நில அபகரிப்பாளா்கள் எனக் கூறப்படும் சூழலை திமுக அரசு ஏற்படுத்தி விட்டது.
கூட்டுறவு வங்கிகள், ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டன. கடன் பெற, சிபில் ஸ்கோா் உள்ளிட்ட 12 சான்றுகள் கேட்டு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிப்காட் அமைக்கிறோம் என்ற பெயரில் விளைநிலங்களை விட்டு விவசாயிகளை வெளியேற்றுகிறது.
ராசி மணல் அணை கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்ததற்காக, எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. முல்லைப் பெரியாறு அணையில் ரூல்கா்வ் முறையை திமுக அரசு அனுமதித்து, சாதாரண பருவமழை காலத்தில் கூட 142 அடி தண்ணீரை சேமிப்பதற்கு முடியாத பின்னடைவை ஏற்படுத்தி உள்ளனா்.
எனவே, விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மிகுந்த தோ்தலாக 2026 தோ்தல் அமைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுகிற அரசாக அமைய வேண்டும் என்ற எதிா்பாா்ப்புடன் எங்கள் கோரிக்கைகளை கொடுத்து இருக்கிறோம் என்றாா்.