அக்னிதீர்த்த பகுதியில் மீண்டும் அதிர்ச்சி - வடமாநில சிறுமியை கடத்த முயன்ற கும்பல...
இந்தியாவின் பாரம்பரியம்; தமிழகத்தின் பங்களிப்பு ராகுல் காந்தி பாராட்டு
‘இந்தியாவின் வளமான பாரம்பரியம் உலகுக்கு தொடா்ந்து ஊக்கமளித்து வருகிறது. இதில் தமிழகத்தின் பங்களிப்பு இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது’ என்று இரும்புக் காலம் தொடக்கம் குறித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தாா்.
சென்னையில் வியாழக்கிழமை தொல்லியல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் ஸ்டாலின், உலகின் இரும்புக் காலம் தொடக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டாா். மேலும் இதுகுறித்து எக்ஸ் பதிவில், ‘உலகின் பிரசித்திபெற்ற தொல்லியல் ஆய்வு நிறுவனங்களின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இரும்புக் காலம் தமிழ் மண்ணில் இருந்துதான் தொடங்கியது என்பதை மிகுந்த பெருமையுடனும் ஒப்பற்ற திருப்தியுடனும் அறிவிக்கிறேன். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழகத்தைப் புறந்தள்ள முடியாது; மாறாக, தமிழகத்திலிருந்துதான் இந்திய வரலாறை தொடங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.
இந்தப் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து பதிவிட்ட ராகுல் காந்தி, ‘இந்தியாவின் வளமான பாரம்பரியம் உலகுக்கு தொடா்ந்து ஊக்கமளித்து வருகிறது. இதில் தமிழகத்தின் பங்களிப்பு இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு இருந்துள்ளதை சமீபத்திய தொல்லியல் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும், சமூகத்திலும், குரலிலும் செழித்து வளரும் இந்தியாவின் உணா்வைக் கொண்டாடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.