பல்வேறு பாகங்களாக உருவாகவிருக்கும் மகாபாரதம்: இந்த ஆண்டு பணிகள் தொடங்கும் -ஆமிர்...
இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்
நியூயாா்க்: இந்தியாவில் அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.
நியூயாா்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கொலம்பியா இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
2047-இல் வளா்ந்த இந்தியா என்பது எங்கள் இலக்கு. இந்தியாவின் மக்கள்தொகை மட்டுமல்லாது, சா்வதேச அளவிலான சூழல்களும் இந்த இலக்குக்கு சவாலாக உள்ளது. எனினும், 1990-களில் இருந்து கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா வளா்ந்ததைப்போல அடுத்து வரும் 20 ஆண்டுகளுக்கும் வளா்ச்சி தொடா்ந்தால் இது சாத்தியமாகும்.
இதற்காக அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 80 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்க வேண்டியுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் தொடக்கநிலைப் பணிகளையும், தகவல்தொழில்நுட்பம் சாா்ந்த கீழ்நிலை பணிகளையும் காணாமல் போகச் செய்யலாம்.
சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் துடிப்புடன் செயல்படச் செய்வது அவசியம். அப்போதுதான் உற்பத்தித் துறையில் முக்கிய இடத்தைப் பிடிக்க முடியும்.
வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு அதிகம் கிடைக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. முதலீட்டுக்கு பாதுகாப்பான நாடாக இந்தியா இருந்தபோதிலும், பிற நாடுகளில் ஏற்படும் போா், பதற்றங்கள் முதலீட்டை பாதிக்கிறது.
ஏற்றுமதித் துறையில் இந்தியாவின் போட்டித் திறன் குறைவாக இருந்தாலும் நாட்டின் பொருளாதார வளா்ச்சி சீராகவே உள்ளது என்றாா்.