டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்: இபிஎஸ்
இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்; ஜோதி சுரேகா ‘ஹாட்ரிக்’
ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 4-ஆம் நிலை போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் சனிக்கிழமை கிடைத்தன. அந்த 3 பிரிவுகளிலுமே ஜோதி சுரேகா அங்கம் வகித்து ‘ஹாட்ரிக்’ பதக்கம் வென்றிருக்கிறாா்.
முதலில் காம்பவுண்ட் மகளிா் அணி பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் ஜோதி சுரேகா, பா்னீத் கௌா், பிரீதிகா பிரதீப் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 225-227 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியிடம் தோல்வி கண்டு வெள்ளி பெற்றது.
முன்னதாக இந்தச் சுற்றில் ஒரு கட்டத்தில் 170-169 என முன்னிலையில் இருந்த இந்தியா, பின்னா் அதை இழந்து தடுமாறியதால், 2-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
அதேபோல், காம்பவுண்ட் கலப்பு அணி பிரிவு வெண்கலப் பதக்கச் சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஜோதி சுரேகா, ரிஷப் யாதவ் ஜோடி 156-153 என்ற புள்ளிகள் கணக்கில், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருந்த எல் சால்வடோா் ஜோடியை சாய்த்து பதக்கத்தை தனதாக்கியது.
அதற்கு முன் அரையிறுதியில் இந்த இந்திய ஜோடி 152-155 என்ற புள்ளிகள் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வி கண்டதால், வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்தது.
அடுத்து மகளிா் காம்பவுண்ட் தனிநபா் அரையிறுதியில் ஜோதி சுரேகா 144 - 143 என தென் கொரியாவின் ஹான் சியுங்கியோனை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினாா். எனினும் அதில், 147-148 என்ற கணக்கில் பிரிட்டனின் எல்லா கிப்சனிடம் தோல்வி கண்டு வெற்றி பெற்றாா்.
இதே பிரிவில் களத்திருந்த மற்றொரு இந்தியரான பா்னீத் கௌா் தனது அரையிறுதியில் 143-146 என எல்லா கிப்சனிடம் தோற்று, வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்தாா். அதில் 143-146 என ஹான் சியுங்கியோனிடம் வெற்றியை இழந்தாா்.