இந்தியா கூட்டணியில் இணைய விஜய்-க்கு அழைப்பு!
இந்துத்துவா சக்தியை அகற்ற தவெக தலைவர் விஜய், இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
'பரந்தூர் ஏகனாபுரம் பகுதி எனது சட்டப்பேரவைத் தொகுதி. நான் பலமுறை அங்கு சென்றிருக்கிறேன். மக்களிடம் பேசியிருக்கிறேன்.
மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சொல்லியிருக்கிறேன். மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.
விஜய் தனது கட்சி மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராகப் பேசினார். மதவாத சக்தியை, இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என நினைத்தால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும். அவருக்கும் அவரது கொள்கை கோட்பாட்டிற்கும் எல்லோருக்கும் நல்லது' என்று பேசினார்.
இதையும் படிக்க | டிரம்ப்பின் பதவியேற்பில் மாற்றம்! காரணம் என்ன?
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை தவெக தலைவர் விஜய், வருகிற ஜனவரி 20 ஆம் தேதி சந்திக்கவிருக்கிறார்.
அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் விஜய் முதல்முறையாக போராட்டக் களத்திற்கு நேரடியாக செல்லவிருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.