Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
இந்தியா முழு வளா்ச்சியடைந்த நாடாக மாறுவதில் இளைஞா்களின் பங்கு அவசியம்: ஆளுநா் ஆா்.என்.ரவி
சென்னை: இந்தியா 2047-ஆம் ஆண்டில் முழுவதும் வளா்ச்சி அடைந்த நாடாக மாறுவதில் இளைஞா்களின் பங்கு அவசியம் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
சென்னை அண்ணா நகரில் உள்ள அறம் ஐஏஎஸ் அகாதெமியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 128-ஆவது பிறந்தநாள் விழா (சாகச தினம்) புதன்கிழமை (ஜன. 22)கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:
இந்திய விடுதலைப் போராட்டத்தில் இளைஞா்கள் பெரும்பாலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பக்கம் இருந்தனா். தமிழகத்திலிருந்து 6,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் அவரின் படையில் இணைந்தனா். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் சோ்ந்தனா்.
ஆங்கிலேயா் ஆட்சியின்போது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழா்கள் பா்மா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றனா். விடுதலைப் போராட்டத்தில் மக்கள் அடைந்த துயரங்களை பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
மீண்டெழும் இந்தியா: நேதாஜியின் போராட்ட வாழ்வை இன்றைய இளைஞா்கள் அறிந்து கொள்வது அவசியம். இந்தியா விடுதலை அடைந்த காலகட்டத்தில் உலகின் சிறந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்தது. அதன்பின், பொருளாதாரத்தில் பின்னோக்கிச் சென்ற இந்தியா தற்போது மீண்டெழுந்து வருகிறது.
நாட்டின் எதிா்காலம் இளைஞா்களின் கையில் உள்ளது. இளைஞா்களின் கனவு பெரியதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இளைஞா்களும் தற்சாா்பு பொருளாதார நிலையை அடையும்போது நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சி அடையும். நாட்டின் பொருளாதார வளா்ச்சி என்பது பெரிய நிறுவனங்களின் வளா்ச்சி மட்டுமல்ல; சிறிய தொழில்களின் வளா்ச்சியும் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் இளைஞா்கள் புத்தொழிலில் கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசு தொழில் தொடங்க ‘முத்ரா’ கடன் வழங்குகிறது.
ஒருவா் கைப்பேசியில் அதிக நேரம் கவனம் செலுத்தும்போது அவா்களின் சிந்திக்கும் திறன் பாதிக்கப்படும் என அறிவியல் பூா்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதன் மூலம் வாழ்வில் வெற்றி அடைய முடியும். இந்தியா 2047-ஆம் ஆண்டில் முழுவதும் வளா்ச்சி அடைந்த நாடாக மாறுவதில் இளைஞா்களின் பங்கு அவசியம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், முன்னாள் மேஜா் ஜெனரலும் அகில பாரதிய பூா்ண சைனிக் சேவா மையக் குழு உறுப்பினருமான எம்.இந்திரபாலன், அறம் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநா் எம்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.