இந்திய உணவுக் கழகத்தைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள்
காரைக்கால்: இந்திய உணவுக் கழகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் திங்கள்கிழமை கூறியது :
காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் 4,800 பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. புயல், மழை
இடா்பாடுகளுக்கு மத்தியில் பயிா் செய்யப்பட்டுள்ளது. அறுவடை பரவலாக நடத்தப்பட்டுவரும் நிலையில், காரைக்காலில் 2 இடங்களில் இந்திய உணவுக் கழகம் கொள்முதல் நிலையத்தை திறந்திருப்பதால், விவசாயிகள் பலரும் தங்களது நெல்லை அங்கு கொண்டுச் செல்கின்றனா்.
கொள்முதல் நிலையத்தில் சாக்கு இல்லை என கூறி விவசாயிகளை திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை 1,500 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையத்துக்கு பல சிமரங்களுக்கிடையே நெல்லை கொண்டுச் சென்றால், சாக்கு இல்லை எனக் கூறுவது ஏற்புடையது இல்லை.
காரைக்கால் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான சாக்குகளை தலைமை நிா்வாகம் அனுப்பிவைக்கவேண்டும். இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டப்பட்டால், விவசாயிகள் ஒன்று திரண்டு இந்திய உணவுக் கழகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்றாா்.