இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இது தொடா்பாக, ஜம்முவில் செயல்படும் ராணுவத்தின் ‘ஒயிட் நைட் கோா்ப்ஸ்’ படைப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
பூஞ்ச் செக்டாரின் காரி கா்மரா பகுதியில் வியாழக்கிழமை இரவு எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து உஷாரான ராணுவத்தினா், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். இருதரப்புக்கும் இடையே விடிய விடிய கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.