இந்திய கேப்டனின் கிண்டல்: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் கூறியதென்ன?
பாகிஸ்தான் அணி குறித்த இந்திய கேப்டனின் கிண்டலான கருத்துக்கு அந்நாட்டின் வேகப் பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ஃரிடி பதிலளித்துள்ளார்.
சூர்யகுமாரின் கருத்து அவருடையது எனப் பொறுமையாக பதிலளித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் அணியினர் ஆசிய கோப்பையில் விளையாடும்போது பஹல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக சூர்யகுமார் கைக் குலுக்குவதை தவிர்த்து விட்டார்.
இந்தப் பிரச்னை பெரியதாக பேசப்பட்டது. இருப்பினும் இந்திய அணி இந்த ஆசிய கோப்பையில் 2 முறையும் பாகிஸ்தானை வென்றுள்ளது.
இது குறித்து சூர்யகுமார் யாதவ், “இனிமேல் பாகிஸ்தான் அணியை எங்களது போட்டியாளர் எனக் கூறாதீர்கள். 7-8 அல்லது 10-9 என இருந்தால்தான் அது போட்டியே. 10-0 அல்லது 11-0 என இருந்தால் எப்படி சொல்ல முடியும்?” எனக் கிண்டலாக பேசியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து ஷாஹீன் ஷா அல்ஃரிடி பேசியதாவது:
அந்தக் கருத்து அவருடையது. அதை அவர் தாராளமாகச் சொல்லலாம். நாங்கள் இறுதிப் போட்டியில் சந்தித்தால், பார்க்கலாம் என்ன நடக்கிறதென.
நாங்கள் இங்கு ஆசிய கோப்பையை வெல்லவே வந்திருக்கிறோம். அதற்கான முழுமையான உழைப்பைக் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறோம் என்றார்.
பாகிஸ்தான் அணி இலங்கையை வென்று சூப்பர் 4 சுற்றில் நல்ல நிலையில் இருக்கிறது. அடுத்து வங்கதேசத்தை வென்றால், நிச்சயமாக இறுதிப் போட்டிக்கான வாய்பை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.