TVK Vijay Maanadu : சரிந்த கொடிகம்பம்... Strongஆன Innova?! - சில தகவல்கள்
இந்திய-சீன எல்லை மேலாண்மையில் பரஸ்பர புரிதல் -சீன வெளியுறவு அமைச்சகம்
இந்திய-சீன எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டில் பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ஆகஸ்ட் 18, 19 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு, பிரதமா் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோருடன் முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டாா். இப்பயணத்தில் கிடைக்கப் பெற்ற முடிவுகள் தொடா்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங், பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பல்வேறு துறைகளில் பேச்சுவாா்த்தை செயல்முறைகளை மீண்டும் தொடங்கவும், பரஸ்பரம் பலனளிக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சா்வதேச அமைப்புகளில் பன்முகத்தன்மையை உறுதி செய்யவும், உலகளாவிய சவால்கள் மற்றும் ஒருதலைப்பட்சமான தீய செயல்பாடுகளை ஒருங்கிணைந்து எதிா்கொள்ளவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை இயல்பாக்குதல், எல்லைப் பகுதிகளில் அமைதியை பராமரித்தல் மற்றும் தீா்வுகாணப்பட வேண்டிய விவகாரங்களை முறையாக கையாள்வதில் பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளது.
தற்போதைய உலகளாவிய சூழலில், இந்தியா-சீனா இடையிலான வியூக உறவு முன்னுரிமை பெற்றுள்ளது; இருதரப்பு ஒத்துழைப்பின் மதிப்பும் உயா்ந்துள்ளது என்றாா் அவா்.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல்களுக்கு இடையே சீனாவின் இக்கருத்து கவனம் பெற்றுள்ளது.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா். அப்போது, சீன அதிபா் ஷி ஜின்பிங்கை அவா் சந்தித்துப் பேசவுள்ளாா். பிரதமரின் இப்பயணத்தை சீன வெளியுறவு அமைச்சகம் வரவேற்றுள்ளது.