இந்திய பேட்டிங் வரிசையில் ‘தடுப்புச் சுவராக’ திகழ்ந்தவர்! -புஜாராவுக்கு பிசிசிஐ புகழாரம்
செதேஷ்வர் புஜாரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதைத் தொடர்ந்து அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) புகழாரம் சூட்டியுள்ளது.
புஜாரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதைக் குறித்து பிசிசிஐ கௌரவ செயலர் தேவஜித் சைகியா தெரிவித்திருப்பதாவது: “புஜாராவின் கிரிக்கெட் வாழ்க்கை தொடர் முயற்சி மற்றும் தன்னலமற்ற தன்மைக்கு சான்றாக விளங்குகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆன்மாவை உருவகப்படுத்தியவராக அவர் திகழ்கிறார்.
எதிரணியின் பந்துவீச்சை லாவகமாக எதிர்த்து விளையாடும் அவரது திறனும், கவனச்சிதறலில்லா கூர்நோக்கும் திறனும் அவரை இந்திய பேட்டிங் வரிசையில் தடுப்புச்சுவராக மாற்றியிருக்கிறது.
இந்த விளையாட்டில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கும் மாண்புகளுக்கு உண்மையாக திகழ்வதுடன் அதேவேளையில், அதனுடன் உயர்நிலையில் வெற்றியடையலாம் என்பதற்கு அவர் ஒரு சான்று.
இந்திய கிரிக்கெட்டுக்கான அவரது அர்ப்பணிப்பு, சர்வதேச அளவிலும் உள்ளூர் அளவிலும், சாலச்சிறந்தது.
இந்த விளையாட்டுக்கும் நாட்டுக்கும் அன்னாரது அனைத்து வித பங்களிப்புக்காகவும் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.