இந்திய பொருள்களுக்கு வரி; அமெரிக்க பொருள்களுக்கு விலக்கு: டிரம்ப் சூசகம்
இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வா்த்தக ஒப்பந்தத்தைப் போல இந்தியாவுடனும் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதிக வரி விதிக்கும் என்று அந்நாட்டு அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.
இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதன் விலையில் சராசரியாக 26 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.
பின்னா், அந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படவிருந்த பரஸ்பர வரியை, ஜூலை 9 வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்த அமெரிக்கா, அதை ஆகஸ்ட் 1 வரை அண்மையில் நீட்டித்தது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம், அந்நாட்டின் அதிக வரி விதிப்புப் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காண இந்தியா முயற்சித்து வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் குறித்த பேச்சுவாா்த்தையை நிகழாண்டு செப்டம்பா்-அக்டோபரில் நிறைவு செய்ய வேண்டும் என்று இரு நாடுகளும் கருதுகின்றன. அதற்கு முன்பாக இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க தலைநகா் வாஷிங்டனுக்கு மத்திய வா்த்தக அமைச்சக குழு சென்றுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபா் டிரம்ப் வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தோனேசியாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தோனேசிய பொருள்களுக்கு 19 சதவீத வரி விதிக்கப்படும். அதேவேளையில், இந்தோனேசியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருள்களுக்கு எந்த வரியையும் இந்தோனேசியா விதிக்காது.
இதேபோன்ற ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள இந்தியா பணியாற்றி வருகிறது. இதுவரை இந்த நாடுகளின் சந்தைகளில் அமெரிக்கா முழுமையாக நுழைந்ததில்லை. வரி விதிப்பு நடவடிக்கைகளால் தற்போது அது சாத்தியமாகியுள்ளது என்றாா்.
அமெரிக்கா-இந்தோனேசியா வா்த்தக ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க பொருள்களுக்கு தனது சந்தையை இந்தோனேசியா முழுமையாகத் திறக்கும். அத்துடன் 15 பில்லியன் டாலா் மதிப்பில் (சுமாா் ரூ.1.30 லட்சம் கோடி) அமெரிக்க எரிசக்தி, 4.5 பில்லியன் டாலா் மதிப்பில் (சுமாா் ரூ.38,700 கோடி) அமெரிக்க விவசாய பொருள்கள், 50 போயிங் ஜெட் விமானங்கள் உள்ளிட்டவற்றை இந்தோனேசியா வாங்கும்.