DD Next Level: "நான் கடவுளைக் கிண்டல் செய்யமாட்டேன்" - 'கோவிந்தா' பாடல் விவகாரத்...
``இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்..'' - ஜெனரல் ராஜீவ் காய்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரால் நடத்தப்பட்டது 'ஆபரேஷன் சிந்தூர்'.
அதன் பின்பு, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை மிகவும் அதிகரித்தது. இரு நாடுகளும் மாற்றி மாற்றி மோதிக் கொண்டன.
இந்தத் தாக்குதலில், 'இந்தியா ராணுவம் இதைச் செய்தது... அதைச் செய்தது' என்று பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
பின்னர், கடந்த சனிக்கிழமை (மே 10) இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தின.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவம் எவ்வகையான நடவடிக்கைகளை எடுத்தது என்பது குறித்து இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இயக்குநர் ஜெனரல் ராஜீவ் காய், விமானப்படை ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர்.

அதில் இயக்குநர் ஜெனரல் ராஜீவ் காய் பேசியதாவது, "பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாகவே ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது இந்திய ராணுவம்.
இந்தியாவின் உளவு அமைப்புகள் மூலம் கிடைத்த தகவலின்படி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் இன்னும் பல இடங்களில் தீவிரவாத முகாம்கள் உள்ளன. 'இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்' என்கிற பயத்தில் அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர்.
இருந்தாலும், 9 தீவிரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டு, துல்லியமாக அழிக்கப்பட்டன. இதில் இலக்கு வைக்கப்பட்டது முழுக்க முழுக்க தீவிரவாதிகளை மட்டுமே, பொதுமக்களை அல்ல.

முதல் நாள் தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முட்கேரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் லஸ்கர்-இ-தொய்பா அமைப்பின் யூசுப் அசார், அப்துல் மாலிக் ராப், முதாசீர் அகமது ஆகிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் இந்திய விமானக் கடத்தல் மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பின்னால் இருந்தவர்கள் ஆவர்.
கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் ராணுவம் இந்திய மக்கள் மற்றும் இந்திய மக்கள் வாழும் பகுதிகளைக் குறிவைத்தது. அதற்கு இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் விமானப்படை மூலம் தக்க பதிலடி கொடுத்தது.
கடந்த 7-10 ம் தேதிகளில், 35-40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது." என்று பேசினார்.