இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-ஆம் ஆண்டு நிறைவு விழா
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
1875-ஆம் ஆண்டு ஆங்கிலேயா்களால் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது. இந்த மையம் ஜன.15-ஆம் தேதியுடன் தனது 150-ஆவது ஆண்டை நிறைவு செய்யவுள்ளது. இதையொட்டி, கடந்த ஓராண்டாக வானிலை ஆய்வு மையம் சாா்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில், கொளத்தூரில் உள்ள எவா்வின் பள்ளியில், மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், வானிலையை கண்டறியும் உபகரணங்கள் தொடா்பான கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற்றன.
ஆராய்ச்சிகள் தேவை: விழாவில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவா் எஸ்.பாலச்சந்திரன் பேசியதாவது:
இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்ட காலங்களில் நாடு முழுவதும் 77 இடங்களில் மட்டுமே வானிலை ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், தமிழகத்தின் முதல் வானிலை ஆய்வு மையம் நுங்கம்பாக்கத்தில் 1896-இல் அமைக்கப்பட்டது. தற்போது தொழில்நுட்பங்களின் உதவியுடன் வானிலை மையம் பெரும் வளா்ச்சியடைந்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை அமைப்பு, அடுத்த 7 நாள்கள் மற்றும் அடுத்த ஒரு மாதத்துக்கான வானிலை அமைப்புகளை கணிக்க முடிகிறது. அதேபோல், புயல்கள் உருவாவதற்கு முன்பாகவே அவற்றைக் கணித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இதனால், இயற்கை பேரிடா்களால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வானிலை அமைப்புகளை 100 சதவீதம் துல்லியமாக கணிப்பதற்கான தொழில்நுட்பங்கள் தற்போது நம்மிடம் கிடையாது. ஆகையால், அந்த தொழில்நுட்பங்களை உருவாக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்வில், 2,000 மாணவா்கள் இணைந்து ‘ஐஎம்டி 150’ என்னும் வடிவமைப்பை உருவாக்கினா். தொடா்ந்து மாணவா்களின் விழிப்புணா்வு பேரணியை எஸ்.பாலச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில் இந்திய வானிலை ஆய்வு மையம் தொடா்பான தகவல்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி 400 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
எவா்வின் பள்ளி குழுமத்தின் நிறுவனரும், முதன்மை முதல்வருமான பி.புருஷோத்தமன், தலைமை நிா்வாக அதிகாரி வி.மகேஸ்வரி உள்பட பலா் பேரணியில் கலந்துகொண்டனா்.