இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்
மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜகவின் முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து மும்பை என்ஐஏ நீதிமன்றத்தின் ஜூலை 31ல் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2008 செப்டம்பர் 29-இல் மகாராஷ்டிரத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்தச் சம்பவத்தில் 6 உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நம்பகமான, உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்தது.
நாக்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னவீஸ், அப்போதைய யுபிஏ அரசு வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டதாகவும், உலகில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தபோது இந்து பயங்கரவாதம் மற்றும் காவி பயங்கரவாதம் போன்ற சொற்களை உருவாக்கியதாகவும் அவர் கூறினார்.
குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை கைது செய்ய உத்தரவிடப்பட்டதாக முன்னாள் ஏடிஎஸ் அதிகாரியிடம் கேட்டபோது, இந்த வழக்கின் பின்னணியில் உள்ள வதி அனைவருக்கும் முன்பாக அம்பலப்படுத்தப்பட்டு வருவதாக முதல்வர் கூறினார்.
இந்து பயங்கரவாதக் கோட்பாடு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அரசு சமநிலைப்படுத்தும் செயலைச் செய்வதைக் காட்ட உருவாக்கப்பட்டது. இது ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவவாதிகளின் நிர்வாகிகளைக் குறிவைக்கும் சதி என்றும், அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இப்போது அவர்களின் சதி அம்பலப்படுத்தப்படுகிறது என்று நான் நினைக்கிறேன்.
அந்தக் காலத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதம் இருந்தது. இப்போதும் அது இருக்கிறது, ஆனால் எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் என்று யாரும் சொல்லவில்லை. இருப்பினும், அந்த நேரத்தில் அனைத்து இந்துக்களையும் பயங்கரவாதிகளாகக் காட்ட காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டதாக அவர் கூறினார்.